விருதுநகர் பாலியல் வழக்கு: முதல்வர் அதிரடி உத்தரவு
![விருதுநகர் பாலியல் வழக்கு: முதல்வர் அதிரடி உத்தரவு விருதுநகர் பாலியல் வழக்கு: முதல்வர் அதிரடி உத்தரவு](https://www.nativenews.in/h-upload/2022/03/23/1502118-dgp-sailendrababu.webp)
தமிழக டிஜிபி சைலேந்திரபாபு
விருதுநகர் பாலியல் வழக்கில் அதிகபட்ச தண்டனை பெற்றுத்தர முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்தார்.
விருதுநகர் மாவட்டத்தில் இளம்பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில், நேரடியாகவும் மறைமுகமாகவும் இந்த குற்றத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்து, அதிகபட்ச தண்டனை பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் மு க ஸ்டாலின் காவல் துறைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளதாக டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில் தாயாருடன் வசித்து வரும் 22 வயது இளம்பெண்ணுக்கு ஹரிஹரன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஹரிஹரன் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி அந்தப் பெண்ணுடன் பாலியல் உறவு வைத்து அதை வீடியோ பதிவு செய்துள்ளார். அந்த இளம்பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ஹரிஹரனை வற்புறுத்தியுள்ளார். ஆனால் ஹரிஹரன் திருமணம் செய்ய மறுத்துள்ளார். இதையடுத்து அந்த இளம்பெண்ணிற்கு வேறு ஒருவருடன் திருமணம் செய்ய ஏற்பாடுகள் வந்தன.
இதையறிந்த ஹரிஹரன் ஏற்கெனவே பதிவு செய்த வீடியோ காட்சிகளை வைத்து மிரட்டி பாலியல் தொந்தரவு செய்து வந்துள்ளார். பிறகு அந்த வீடியோவை ஹரிஹரன் தனது நண்பர்களுக்கு சமூக ஊடகம் மூலம் அனுப்பி வைத்துள்ளார். ஹரிஹரனின் நண்பர்களும் அந்த வீடியோவை இளம் பெண்ணிடம் காட்டி மிரட்டி அவருடன் பாலியல் உறவு வைத்ததும், ஹரிஹரன் தொடர்ந்து இளம் பெண்ணை தொந்தரவு செய்து வந்ததும் தெரிய வந்துள்ளது.
விசாரணையில் கிடைத்த தகவல்கள் மற்றும் தடயங்களின் அடிப்படையில் இதில் ஈடுபட்டது 8 குற்றவாளிகள் என தெரியவந்துள்ளது. இதில் ஹரிஹரன் மாடசாமி ,பிரவீன், ஜுனைத் அகமது ஆகியோர் கைது செய்யப்பட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.நான்கு பேர் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் என்பதால் ராமநாதபுரம் அரசு கூர்நோக்கு இல்லத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கில் தீவிர விசாரணை மேற்கொண்டு நேரடியாகவும் மறைமுகமாகவும் குற்றத்தில் ஈடுபட்ட அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்து அவர்கள் மீது விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து அதிகபட்ச தண்டனை பெற்று தர வேண்டும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாகவும், அதனடிப்படையில் இந்த வழக்கு புலன்விசாரணை காவல் துணை கண்காணிப்பாளர் அர்ச்சனாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். மேலும் காவல்துறை தென்மண்டல தலைவர் அஸ்ரா கார்க் மதுரை சரக டிஐஜி பொன்னி ஆகியோர் விருதுநகரில் முகாமிட்டு புலன் மேற்பார்வை செய்து வருவதாகவும் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu