ரமலான் தினத்தில் நாடாளுமன்ற நிலைக்குழு பயணம்: மதுரை எம்.பி வெங்கடேசன் கண்டனம்
மதுரை எம்பி சு.வெங்கடேசன்
ரமலான் திருநாளன்று நாடாளுமன்ற நிலைக்குழு கூட்ட பயணம் மேற்கொள்வது தேசத்தின் பன்மைத்துவ உணர்வை மதிக்கத்தவறும் போக்கு என்று சு.வெங்கடேசன் எம்.பி கண்டனம்தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ரமலான் பெருநாளன்று நிர்ணயிக்கப்பட்டுள்ள கிராமப்புற மேம்பாடு மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சக நிலைக்குழு கூட்ட சுற்றுப் பயண நிகழ்ச்சி நிரலை மாற்ற வேண்டும், அக்குழுவில் உள்ள இரண்டு இஸ்லாமிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்க இயலாத சூழலை உருவாக்குவது சரியல்ல என்று நான் எழுதிய கடிதத்திற்கு அந்த நிலைக்குழுவில் இருந்து பதில் வந்துள்ளது.
அந்த பதிலின் உள்ளடக்கமும், தொனியும் அதிர்ச்சி அளிக்கிறது. நாடாளுமன்ற செயலகத்தின் அமைச்சக நிலைக்குழுவின் துணைச் செயலாளர் நிஷாந்த் மெஹரா அக்குழுவில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் எம் முகமது அப்துல்லா வுக்கு பதில் அளித்து விட்டதாக எனக்கு வந்த மின் அஞ்சலில் தெரிவிக்கப் பட்டுள்ளது.அதுவும் அந்த உறுப்பினரே நாடாளுமன்ற நிலைக் குழுவில் கலந்து கொள்வதில் உள்ள சிரமத்தை விளக்கி தள்ளி வைப்பை கோரிய பிறகும் அவ்வேண்டுகோள் மறுக்கப்பட்டுள்ளது. தீபாவளி, கிறிஸ்துமஸ், ரமலான் போன்ற பெரு விழாக்களை கணக்கில் கொண்டு இத்தகைய சுற்றுப் பயணங்கள் அமைய வேண்டும் என்பது மிக மிக சாதாரண எதிர்பார்ப்பு.
மேலும் சிறுபான்மை மக்கள் விழாக்கள் எனில் எந்தவொரு அமைப்பிலும் உள்ள பெரும்பான்மை உறுப்பினர்களின் வசதிகளைப் பொறுத்து தீர்மானிக்கப்பட்டு விடக்கூடாது என்பது இச்சமுகத்தின் பண்பாகவும் இருக்க வேண்டும். ஆகவே அப்துல்லா வுக்கு மட்டும் அல்ல, தேசம் முழுமைக்கும் நீங்கள் பதில் அளிக்க கடமைப்பட்டுள்ளீர்கள். அப்துல்லா அவர்களுக்கு நிலைக்குழு அளித்துள்ள பதிலையும் நான் பார்த்தேன். அந்த பதிலின் உள்ளடக்கமும் தொனியும் கூட பொருத்தமானதாக இல்லை. ஏப்ரல் 5 ஆம் தேதி நடைபெற்ற குழு அமர்விலேயே இந்த சுற்றுப் பயண தேதிகள் முன் மொழியப்பட்டு முடிவு செய்யப்பட்டதாக அக்கடிதம் தெரிவிக்கிறது. முன் மொழியும் போதே ரமலான் கணக்கில் கொள்ளப்பட வேண்டாமா என்பதே கேள்வி. அதுவும் ரமலான் இருப்பது சுற்றுப் பயண நிகழ்ச்சி நிரலிலும் குறிப்பிடப்பட்டு உள்ளது.
அடுத்து, ரமலான் அன்று அலுவல் இல்லை, குழுவின் பயணம் மட்டுமே என்று பதில் அளிக்கப்பட்டுள்ளது. இது என்ன பதில்? பயணமும் அலுவலின் பகுதிதானே. மேலும் உறுப்பினர்கள் சொந்த ஊருக்கு வந்து விட்டு போகிற கால இடைவெளி தரப்பட்டுள்ளதா என்றால் அதுவும் இல்லை. மே 2 ஆம் தேதி காங்டாக் இல் இருக்கிற குழு மே 3 ஆம் தேதி பயணம் செய்து காளிம்பாங் செல்லும் என்பது நிகழ்ச்சி நிரலில் உள்ளது. புதுக் கோட்டைக்கு அருகே சொந்த ஓர் உள்ள உறுப்பினர் ஒருவர் எப்படி இங்கே வந்து விட்டு வட கிழக்கு மாநிலம் வரை செல்ல முடியும்? இந்த சுற்றுப் பயண ஏற்பாட்டாளர்கள் எல்லா பணிகளையும் செய்திருப்பார்கள் என்று ஒரு விளக்கம். ஏற்பாடு பணியில் இருப்பவர்களில் சிலருக்கும் கூட சிரமம் இருந்திருக்கலாம். இக் கோரிக்கையின் பின்புலத்தில் உள்ள உள்வாங்குகிற உணர்வு கொஞ்சம் கூட அப்பதிலில் இல்லை. கடைசி நிமிடத்தில் மாற்ற முடியாது என்கிறது பதில். ஆனால் ரமலான் தேதி 365 நாட்களுக்கு முன்னரே தெரிந்த ஒன்று தானே.
ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் வேண்டுகோளை பரிசீலிக்கும் முறை இதுவல்ல. இயலாது என்ற பதில் ஏற்கத்தக்கதல்ல. கடந்த ஆண்டு ரமலான் விழா நாளன்று சி.பி.எஸ்.இ தேர்வுகள் அறிவிக்கப்பட்டது. தேதியை மாற்றுங்கள் என்று நான் முறையிட்டேன். பலரது எதிர்ப்பிற்கு பின்னர் மாற்றப்பட்டது. ஆகவே பல்லாயிரம் பேர் சம்பந்தப்பட்ட தேர்வு தேதிகளே மாற்றப்பட்டுள்ளது. 30 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒரு சுற்றுப் பயணத்தில் மாற்றம் செய்ய முடியாதா? நாட்டின் மிக உயர்ந்த சட்டம் இயற்றும் அவை, இது போன்ற பிரச்னைகளில் கோட்பாடு ரீதியான அணுகுமுறையை கடைப்பிடிப்பது மிக முக்கியம். முன்னுதாரணமாகவும் அமையும்.
நான் மீண்டும் எனது கருத்தை வலியுறுத்தி நிலைக்குழுவின் தலைவருக்கு இன்று கடிதம் அனுப்புகிறேன். பிரச்னை தேதி சம்பந்தப்பட்டதல்ல. அடுத்த மனிதர்கள் மீதான அக்கறையும், சகிப்புத்தன்மையும் சம்பந்தப்பட்டது. தேசத்தின் பன்மைத்துவ உணர்வை மதிக்கத்தவறுவதாகும் என்று காட்டமாக பதிவிட்டுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu