பள்ளிக்கு ரூ.7 கோடி நிலம் வழங்கிய வங்கி ஊழியரை தேடி சென்று வாழ்த்திய எம்.பி.

பள்ளிக்கு ரூ.7 கோடி நிலம் வழங்கிய வங்கி ஊழியரை தேடி சென்று வாழ்த்திய எம்.பி.
X

பள்ளிக்கு ரூ.7 கோடி மதிப்புள்ள நிலத்தை தானமாக வழங்கிய ஆயி பூரணம் அம்மாளுக்கு வாழ்த்து தெரிவித்த சு. வெங்டசேன் எம்பி.

பள்ளிக்கு ரூ.7 கோடி மதிப்புள்ள நிலத்தை தானமாக வழங்கிய வங்கி ஊழியரை தேடி சென்று வாழ்த்தி இருக்கிறார் சு. வெங்கடேசன் எம்.பி.

மதுரை மாவட்டம் மேலூர் அருகேயுள்ள கொடிக்குளம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ஆயி என்ற பூரணம். கனரா வங்கியில் வேலைபார்த்த இவரது கணவர் உக்கிரபாண்டியன், 30 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். வாரிசு அடிப்படையில் கணவரின் வேலை ஆயி என்ற பூரணத்துக்குக் கிடைத்தது. இவர் தற்போது மதுரை தல்லாகுளம் கனரா வங்கிக் கிளையில் ஊழியராகப் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், ஆயி என்ற பூரணத்தின் மகள் ஜனனி(வயது30) இரண்டு ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். அவர் இறக்கும் தருவாயில் தனது தாயாரிடம், தனது தாத்தா வழங்கிய நிலத்தைச் சொந்த ஊரில் உள்ள பள்ளிக்குத் தானமாக வழங்குமாறு கூறியுள்ளார்.

இதையடுத்து கொடிக்குளம் அரசு நடுநிலைப் பள்ளியைத் தரம் உயர்த்துவதற்காக, தனது பெயரிலிருந்த ரூ.4 கோடி மதிப்பிலான ஒன்றரை ஏக்கர் நிலத்தை அரசுக்குத் தானமாக வழங்கினார். கடந்த 5-ம் தேதி பள்ளியின் பெயரில் நிலத்தைப் பத்திரப் பதிவும் செய்து கொடுத்தார் என்று ஃபேஸ்புக்கில் பிரகாஷ் என்பவர் ஒரு பதிவைப் போட்டுள்ளார்.பேஸ்புக்கில் கணக்கு வைத்திருக்கும் பலரும் இதனை பார்த்து அவரை கொடை வள்ளல் என புகழ ஆரம்பித்தார்கள். சமூக ஊடகங்கள் இவரைக் கொண்டாட அவரது கொட்டிக் கொடுக்கும் மனசுதான் காரணம். சுருக்கமாகச் சொன்னால், கடை ஏழு வள்ளல் என்பார்கள். இவர் நம் காலத்தில் நம் கண்முன்னால் வாழும் வள்ளல் என புகழ்ந்தன.

இவர் தனது 7 கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள நிலத்தை அரசுப் பள்ளிக்கு எழுதிக் கொடுத்த செய்தி, சில தொலைக்காட்சிகளில் செய்தியாக வெளியானது. அந்தச் செய்தி குறித்து எந்தப் பெருமையும் இல்லாமல் ஊரில் தனது வாழ்க்கையை சகஜமாக நடத்திக் கொண்டிருந்த ஆயி பூரணம் அம்மாளைச் சந்திக்க எம்.பி. சு. வெங்கடேசன் விரும்பி இருக்கிறார். அதற்காக அவரை தொலைபேசியில் அழைத்துச் சந்திக்க வரலாமா என்று அனுமதி கேட்டிருக்கிறார்.

ஆனால், பூரணம் அம்மாளுக்கு சவெங்கடேசனைத் தெரியாது. அவர் எம்.பி என்பது தெரியாது. ஆகவே மாலை ஆறு மணிக்கு மேல் வங்கியில் வேலை முடிந்த பின்னர் வாருங்கள். நான் வங்கியில் பணியில் இருக்கிறேன். அது முடிந்தால்தான் உங்களிடம் பேச முடியும் என்று சொல்லி இருக்கிறார். அழைப்பைத் துண்டித்துவிட்டு தகவலை உறவினர்களிடம் கூறிய போதுதான் பேசியது எம்.பி என்பது அவருக்குச் சொல்லப்பட்டுள்ளது. அசந்து போனார் பூரணம் அம்மாள்.

அடுத்த நாள் அவரது வங்கிக்குச் சென்று பாராட்டுக்களைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார் சு. வெங்கடேசன். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள ஒரு பதிவில், “நான் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்தி வணங்குதல் எனது கடமையென நினைக்கிறேன். மதுரையில் இதுபோன்று நல்ல செயல்களில் ஈடுபடுகிறவர்களைத் தொடர்ந்து பார்க்க முடிகிறது. சில மாதங்களுக்கு முன் தத்தனேரியைச் சார்ந்த வத்தல் வணிகர் இராஜேந்திரன் திரு.வி.க. மாநகராட்சிப் பள்ளிக்குக் கூடுதல் கட்டிடம் கட்ட ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் கொடுத்தார். அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தோம். அதேபோல் தமிழறிஞர் ஐயா சாலமன் பாப்பையா அவர்கள் வெள்ளிவீதியார் பெண்கள் மாநகராட்சி பள்ளிக்குக் கூடுதல் கட்டிடம் கட்ட 25 லட்ச ரூபாய் வழங்கினார். இப்பொழுது ஆயி பூரணம் அம்மாள் அவர்கள் ஒத்தக்கடை அருகில் உள்ள கொடிக்குளம் அரசுப் பள்ளிக்கு ரூபாய் 4.50 கோடி மதிப்பில் உள்ள 1.5 ஏக்கர் நிலத்தை வழங்கியுள்ளார். இதனுடைய சந்தை மதிப்பு 7.50 கோடி ஆகும்.

நடுநிலைப் பள்ளியாக உள்ள இந்த அரசுப்பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக மாற்றுவதற்கு இந்த நிலத்தைக் கொடுத்துள்ளேன் என்று கூறியுள்ளார். இந்த இடத்தையும் பள்ளிக் கல்வித்துறை அதிகாரியிடம் பதிவு செய்து கொடுத்துவிட்டு சத்தம் இல்லாமல் வந்து கனரா வங்கியில் ஊழியராகத் தனது அன்றாடப் பணி செய்து கொண்டிருக்கின்றார். இப்படிப்பட்டவர்கள் தான் உண்மையான மாணிக்கங்கள். இந்த உலகத்தில் பணம்தான் மிகப் பெரியது என்று பலரும் நினைக்கின்றார்கள். ஆனால் அதைவிட பெரியது இந்த உலகில் நிறைய உண்டு. ஆயி பூரணம் அம்மாளின் செயல் அதைத்தான் இந்த உலகிற்கு உரத்து சொல்கிறது.

இவர்களுடைய உயர்ந்த எண்ணத்தைக் குணத்தைக் கொண்டாட வேண்டிய நேரம் இது. அந்த வகையில் தான் பூரணம் அம்மாவை மதுரையின் மக்கள் பிரதிநிதி என்ற வகையில் நான் நேரில் சந்தித்து வாழ்த்தி வணங்கினேன். உடன் கனரா வங்கியின் வட்டார மேலாளர் சாகு உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் இருந்தார்கள் என்று கூறியுள்ளார்.

இந்த அம்மாளைப் பற்றிய செய்தி வெளியான நாள் முதலே அவரை சமூக ஊடகங்கள் கொண்டாடி வருகிறது. ஆனால், அந்தப் புகழ் வெளிச்சம் எதையும் தலையில் ஏற்றிக் கொள்ளாமல் தன் வேலையை வங்கியில் செய்து வருகிறார் இந்தக் கொடை வள்ளல் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil