ரயில்வே தேர்வு : தென் மாவட்டங்களில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்க கோரிக்கை
மதுரை மற்றும் தென் மாவட்ட பகுதி தேர்வாளர்களுக்கு வெளிமாநிலங்களில் ரயில்வே தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் போக்குவரத்து நலன் கருதி தென்மாவட்டங்களில் இருந்து மைசூர் மற்றும் மங்களூருக்கு சிறப்பு ரயில்கள் இயக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளனர். கடந்த 2019, மே மாதம் ரயில்வே தேர்வு வாரியம் நடத்தும் என்டிபிசி மற்றும் குரூப் டி தேர்வுகளுக்கான அறிவிப்பு வெளியானது.மொத்தமுள்ள 24,649 பணியிடங்களுக்கு ஒட்டுமொத்தமாக நாடு முழுவதும் இருந்து 2 கோடியே 40 லட்சம் பேர் விண்ணப்பித்தனர்.
இதில், தமிழகத்திலிருந்து 9 லட்சத்து 45 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர்.இதன் முதல்நிலை கணினி வழித்தேர்வு 2021ம் ஆண்டு தொடக்கத்தில் நடத்தப்பட்டது.ஆர்ஆர்பி சென்னை 601 ரயில்நிலைய அதிகாரி காலியிடங்களுக்கு 2020 டிசம்பருக்கும், 2021 ஜூலைக்கும் இடையே முதல்நிலைத்தேர்வு நடத்தியது.இந்த முதல்நிலை தேர்வு தமிழகத்திலேயே உள்ள நகரங்களில் நடத்தப்பட்டது. இதற்கான முடிவுகள் மார்ச் 22க்கும், ஏப்ரல் 22க்கும் இடையே வெளியிடப்பட்டது.
தேர்வானவர்களுக்கு இரண்டாம்நிலை தேர்வுக்கு, தேர்வர்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்வு செய்கின்றனர்.தேர்வெழுதிய விண்ணப்பதாரர்களின் கோரிக்கையின்படி, உயர்மட்டக்குழு அமைக்கப்பட்டு தேர்வு குறித்து முழுமையான விசாரணை நடத்தியது. இதில், பெரும்பாலான விண்ணப்பதாரர்கள் ஒரே நேரத்தில் இந்த தேர்வை நடத்த வேண்டுமென்று கோரிக்கை விடுத்திருந்தனர்.
அதன்படி, நாடு முழுவதும் பாரபட்சமற்ற ஒரே கேள்வித்தாள் வழங்க முடியும் என்பது விண்ணப்பதாரர்களால் எதிர்பார்க்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட உயர்மட்டக்குழுவும் ஒரே நேரத்தில் தேர்வு நடத்த பரிந்துரைத்தது.இதனால், தமிழகத்தை சேர்ந்த சிலருக்கு அருகிலுள்ள மாநிலங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தை சேர்ந்த விண்ணப்பதாரர்கள் தமிழ்நாட்டில் மதுரை, சேலம், திருச்சி, கோயம்புத்தூர், திருநெல்வேலி, சென்னை மற்றும் கேரளாவில் திருவனந்தபுரம், கோழிக்கோடு, எர்ணாகுளம், கர்நாடகாவில் மங்களூரு, பெங்களூரு, மைசூரு, ஹூப்ளி பெல்காம், ஆந்திராவில் திருப்பதி, நெல்லூர், குண்டூர், விஜயவாடா, ராஜமுந்திரி, விசாகப்பட்டினம் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையங்களில் தேர்வு எழுத கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அகில இந்திய அளவில் நடைபெறும் இத்தேர்வுகளில் தமிழ்நாட்டுக்கு மட்டுமின்றி பிற மாநில விண்ணப்பதாரர்களுக்கும் சொந்த மாநிலத்தில் இல்லாமல் அருகிலுள்ள மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது.
வரும் மே 9ம் தேதி நடைபெற இருக்கும் தேர்வுகளுக்காக, வரும் மே 8ம் தேதி மதியம் திருநெல்வேலியிலிருந்து விருதுநகர், மதுரை, திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம், பெங்களூரு வழியாக மைசூருக்கு ஒரு ரயிலும், நாகர்கோவிலில் இருந்து திருநெல்வேலி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், கரூர், ஈரோடு, கோயம்புத்தூர், பாலக்காடு, கோழிக்கோடு வழியாக மங்களூர் வரை ஒரு சிறப்பு ரயிலும் இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் தேர்வு எழுத இருக்கும் மாணவர்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இந்த இரு சிறப்பு ரயில்களும் அதிகாலை 5.30 மணிக்குள் தேர்வு மையங்களை சென்றடையும் வகையில் ரயில்களை இயக்க வேண்டுமென்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை என்பதாலும், கோடை விடுமுறை என்பதாலும் நாகர்கோவில், திருநெல்வேலி, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து பெங்களூரு மங்களூர், மைசூர் போன்ற இடங்களுக்கு டிக்கெட் கிடைக்காது என்பதால் மாணவர்களின் சிரமங்களை போக்கும் வகையில் உடனடியாக தென்னக ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்க வேண்டுமென்ற கோரிக்கை வலுத்துள்ளது.
காலதாமதம் செய்யாமல் உடனடியாக சிறப்பு ரயில்களை அறிவிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தென் மாவட்டங்களை சேர்ந்த பல்வேறு எம்பி க்கள் மற்றும் எம்எல்ஏ க்கள் இந்த சிறப்பு ரயில்கள் குறித்து தெற்கு ரயில்வேக்கு கடிதம் எழுதி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu