மதுரையில் விஜயகாந்திற்கு சிலை அமைக்க மாநகராட்சி மேயர் இந்திராணி பரிசீலனை

மதுரையில் விஜயகாந்திற்கு சிலை அமைக்க மாநகராட்சி மேயர் இந்திராணி பரிசீலனை
X

விஜயகாந்த்.

மதுரையில் விஜயகாந்திற்கு சிலை அமைக்க பரிசீலனை செய்யப்படும் என மாநகராட்சி மேயர் இந்திராணி தெரிவித்துள்ளார்.

மறைந்த தே.மு.தி.க. தலைவரும், நடிகருமான விஜயகாந்துக்கு மதுரையில் முழு உருவச் சிலை நிறுவுவது தொடர்பாக பரிசீலனை செய்யப்படும் என மேயர் இந்திராணி தெரிவித்துள்ளார்.

மதுரையில் விஜயகாந்துக்கு சிலை நிறுவவேண்டும் என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்திருக்கும் நிலையில், அதுபற்றி அமைச்சர்கள் மூர்த்தி மற்றும் பழனிவேல் தியாகராஜன் ஆகியோரிடம் ஆலோசித்துவிட்டு அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என மேயர் இந்திராணி கூறியுள்ளார். இதன் மூலம் அடுத்தது என்ன என்ற எதிர்பார்ப்பு எகிறி வருகிறது.

மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணிக்கு மாணிக்கம் தாகூர் எம்.பி. எழுதிய கடிதத்தில், மதுரையில் பிறந்து வளர்ந்து, வாழ்ந்து, அரசியலிலும், சினிமாவிலும் மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த கேப்டன் விஜயகாந்துக்கு மாமதுரையில் முழு உருவச் சிலை அமைத்து நிறுவ வேண்டும் எனக் கேட்டுக் கொண்டிருந்தார். விஜயகாந்த் காலமான கடந்த 28ஆம் தேதி அன்றே இந்தக் கோரிக்கையை முதல் ஆளாக அவர் முன் வைத்தார்.

மாணிக்கம்தாகூரை தொடர்ந்து இன்னும் சிலரும் இத்தகைய கோரிக்கையை எழுப்பியதாக தெரிகிறது. இந்நிலையில் செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு இது குறித்து மேயர் இந்திராணி கூறிய போது, விஜயகாந்துக்கு சிலை நிறுவ வேண்டும் என்ற கோரிக்கையை அமைச்சர்களிடம் ஆலோசித்துவிட்டு அரசின் கவனத்துக்கு முறைப்படி கொண்டு செல்வோம் எனக் கூறியிருக்கிறார்.

விஜயகாந்தை பொறுத்தவரை மதுரை மேலமாசி வீதிகளில் வளர்ந்தவர். அங்குதான் அவரது தந்தை கட்டிய ஆண்டாள் பவனம் பூர்வீக இல்லம் அமைந்துள்ளது. விஜயகாந்துக்கு சிலை அமைக்கும் விவகாரத்தில் மேயர் இந்திராணி தன்னிச்சையாக எந்த முடிவும் எடுக்க முடியாது என்பதால் அவர் இத்தகைய பதிலை தெரிவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே விஜயகாந்த் குடும்பத்தினர் கேட்காமலேயே அவருக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெறும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்ததும், அதேபோல் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த தீவுத் திடலில் விஜயகாந்த் உடலை வைப்பதற்கான ஏற்பாடுகளையும் செய்து கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!