மதுரை மத்திய சிறை விரைவில் வேறு இடத்துக்கு மாற்றம்
மதுரை மத்தியசிறைச்சாலை(பைல்படம்)
மதுரை : தமிழகத்தில் 157 ஆண்டுகள் பழமை வாய்ந்த மதுரை மத்திய சிறை இடநெருக்கடியை தவிர்க்க 23 கி.மீ., துாரத்தில் உள்ள இடையப்பட்டிக்கு மாற்றப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்காக 100 ஏக்கரில் கட்டுமான பணிகளை துவங்க அரசு பரிசீலித்து வருகிறது.மதுரை மத்திய சிறை ஆங்கிலேயர் காலத்தில் 1865ல் கட்டப்பட்டது. தற்போது 1200க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். பெண்கள் சிறையும் உள்ளது. இடநெருக்கடியில் சிறை தவித்து வருகிறது.
நகரின் மையப்பகுதியில் இருப்பதால் மெயின் ரோட்டில் இருந்து தடைசெய்யப்பட்ட பொருட்களை சமூக விரோதிகள் சிறைக்குள் வீசும் நிலையுள்ளது. இதை தடுக்க 24 மணி நேரமும் சிறைக்கு வெளியே காவல் காக்க வேண்டியுள்ளது.இதை தவிர்க்க புழல் சிறை போல் மதுரை புறநகர் பகுதிக்கு சிறையை மாற்ற வேண்டும் என ஊடகங்கள் தொடர்ந்து செய்தி வெளியிட்டு வந்தது. அதன் எதிரொலியாக தற்போது மதுரை மாவட்டம், திருவாதவூர் அருகே இடையப்பட்டியில் இந்தோ - திபெத் எல்லை பாதுகாப்பு படை முகாம் அமைந்துள்ள இடத்தின்அருகே சிறையை மாற்ற நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அரசின் ஒப்புதல் கிடைத்ததும் புழல் சிறை கட்டமைப்பை அடிப்படையாக கொண்டு கட்டுமான பணி துவங்கப்படும். தியான மண்டபம், நுாலகம், ஆடிட்டோரியம், வீடியோ கான்பரன்சிங் வசதியுடன் கூடிய சிறை நீதிமன்றம், நவீன சமையலறைகள், உயர் சிகிச்சையுடன் கூடிய மருத்துவமனை, உடற்பயிற்சி கூடம், கேண்டீன், பிரத்யேக தொழில் கூடங்கள், பூங்கா அமைகின்றன.
தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழகம் கட்டுமான பணியை மேற்கொள்ளவுள்ளது.மதுரை சிறை என்னவாகும்மதுரை சிறை வளாகம் பசுமையாக உள்ளது. இச்சிறை இடையப்பட்டிக்கு மாற்றப்பட்டதும் இந்த இடத்தை பசுமை பூங்காவாக மாற்றும் திட்டமும் உள்ளது. இது ஒருபுறமிருந்தாலும் தெலங்கானா மாநிலத்தில் இதுபோன்று இடமாற்றப்பட்ட சிறை தற்போது சுற்றுலா பயணிகள் வந்து பார்க்கும் இடமாக உள்ளது. ரூ.500 செலுத்தினால் கைதியாக 'செல்'களில் அடைபட்டு பயணிகள் உணர முடியும். இத்திட்டத்திற்கு அம்மாநிலத்தில் நல்ல வரவேற்பு உள்ளது. அதுபோல் மதுரை சிறையையும் சுற்றுலா இடமாக மாற்ற சிறை நிர்வாகமும், சுற்றுலா துறையும் இணைந்து முடிவெடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu