ஹிந்தி மொழியை தேசிய மொழியாக ஏற்க போவதில்லை -இயக்குனர் பா.ரஞ்சித்
"வட இந்தியர்கள் தென்னிந்தியர்களைவிட மேலானவர்கள் என்றும், பல மாநிலங்களில் இந்தி பேசப்படுவதால், அது தேசிய மொழியென்றும் கருதப்படுகிறது.ஆனால், அதனை நாம் ஏற்றுக்கொள்ளமாட்டோம்" என்று இயக்குநர் பா.ரஞ்சித் கூறியுள்ளார்.
மதுரையில் நீலம் பண்பாட்டு மையம் சார்பில், வேர்ச்சொல் எனும் தலித் இலக்கியவாதிகளுக்கான 2 நாள் கூடுகை நடைபெறுகிறது. இந்த விழாவில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த தலித் எழுத்தாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் பங்கேற்கின்றனர். மதுரை உலகதமிழ்ச் சங்கத்தில் இந்த விழா நடைபெற்று வருகிறது. முன்னதாக திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் செய்தியாளர்களைச் சந்தித்தார். இந்தி தேசிய மொழி என்பது தொடர்பான நடிகர்களின் கருத்து மோதல் குறித்த கேள்விக்கு, "இந்திய அளவில் இந்தி மொழி ஆதிக்கம் அதிகமாக இருப்பதனால் அவ்வாறு நினைக்கின்றனர்.
வட இந்தியா, தென் இந்தியாவைவிடவும். வட இந்தியர்கள் தென்னிந்தியர்களைவிடவும் உயர்ந்தவர்கள் என்ற எண்ணம் சிலருக்கு இருக்கிறது. அதேபோல் இந்தி மொழி, பல மாநிலங்கள் சேர்ந்து பேசக்கூடிய ஒரு மொழியாக இருப்பதாலும் அது மேன்மையானது என்று யோசிக்கலாம். ஆனால் அதை நாம் ஏற்றுக்கொள்ளவில்லையே. தொடர்ந்து நாம் சண்டை போட்டுக் கொண்டுதான் இருக்கிறோம். நாம் அதனை ஒருபோதும் தேசிய மொழியாக ஏற்கப்போவதில்லை. எனக்கான இணைப்பு மொழி தமிழாகத்தான் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அப்படி இருப்பது தவறில்லை. இந்தியாவில் திராவிடர்களுக்கான முக்கியத்துவம் அவசியம் என்று நான் கருதுகிறேன். திராவிடர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து நிற்பது முக்கியமனது என்றும் நான் நினைக்கிறேன்" என்று பதிலளித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu