ஆரியத்திற்கு எதிரான அனைவருமே திராவிடர்கள்தான்: தொல் திருமாவளவன் பேச்சு
மதுரையில் நடைபெற்ற செஞ்சட்டை பேரணி
மதுரையில் நடந்த செஞ்சட்டை பேரணி மற்றும் வர்க்க-வருண ஆதிக்க எதிர்ப்பு கூட்டத்தில் பல்வேறு கட்சிகள், அமைப்புகளைச் சேர்ந்த தலைவர்கள் பா.ஜ.க-வின் கொள்கைகளை கடுமையாக விமர்சித்து பேசினர்.
இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய தொல்.திருமாவளவன், நான்கு வர்ணங்களை எதிர்த்து மூன்று நிறங்கள் தொடுக்கும் போரின் அறிவிப்பாக இந்த மாநாடு உள்ளது. நான்கு வர்ணங்களுக்குள் பல்லாயிரக்கணக்கான சாதிகள் உள்ளன.
நாடு முழுவதும் உள்ள 30 கோடி எஸ்.சி, எஸ்.டி பழங்குடியின மக்கள் நான்கு வர்ணங்களுக்குள் வரமாட்டார்கள். பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட அரசால் அல்லது ஆதிக்க சாதியினரால் அடையாளப்படுத்தப்படுபவர்கள்தான் சூத்திரர்கள்.இதை ஏற்றுக்கொள்ளாதவர்கள்தான் பஞ்மர் என அழைக்கப்படுகின்றனர்.வர்ணாசிரமத்தை பட்டியலின மற்றும் பஞ்சமர்கள் ஏற்றுக்கொள்வதில்லை.
இந்தியாவில் ஆரியன், திராவிடன் என இரண்டே மரபினம்தான். இரண்டுக்கும் டி.என்.ஏ வேறு, ஏதோ தி.க.வும், தி.மு.க.வும் பெரியாரிஸ்டுகள் மட்டுமே திராவிடர்கள் இல்லை. இந்த மண்ணில் பட்டியலினத்தவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள் அனைவருமே திராவிடர்கள்தான்.திராவிடத்தை எதிர்ப்பவர்கள் அயோத்திதாச பண்டிதர் பேசியதையும் எதிர்க்க வேண்டும். ஆனால் பெரியாரை மட்டுமே எதிர்ப்பார்கள்.
செஞ்சட்டை பேரணி:இந்தியாவில் எதிர்ப்பு கலகம் செய்பவர்கள்தான் பறையர்கள். ஆரியர்கள் தங்களிடையே உருவாக்கிக்கொண்ட வாழ்க்கை முறைதான் நான்கு வர்ணம்.அதில் சூத்திரர்கள் நாம் இல்லை. இந்தியா முழுவதும் வாழ்ந்தவர்கள் ஆதிதிராவிடர்கள். இந்தியாவே திராவிடர்களின் நாடுதான்.ஆதிக்கத்தையும், சுரண்டலையும் எதிர்க்க போராடியவர்கள் அம்பேத்கர், பெரியார். மேல்சாதி, கீழ்சாதி கட்டமைப்பை அவ்வளவு எளிதாக வெட்டி சாய்த்து விட முடியாது.
தேர்தல் காலத்தில் மட்டும்தான் இந்திய அரசியல் அமைப்பு சட்டம் வேலை செய்கிறது. மற்ற நேரதில் சனாதன மனுதர்ம சட்டம் மட்டுமே வேலை செய்கிறது.பட்டியலினத்தவர்களை வஞ்சகத்தால் வளைத்து பதவி தருகிறேன் எனக் கூறுவார்கள். இந்தியாவிற்கு பிரதமரமாக மோடி இருந்தாலும் பார்ப்பனர்களுக்கு அவர் பணியாள்தான். ஆர்.எஸ்.எஸ்சில் பார்ப்பனர்கள் மட்டுமே தலைவராக முடியும். பிரதமர் மோடி இன்னொரு முறைகூட பிரதமர் ஆகலாம். ஆனால் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தலைவராக முடியாது.
சூத்திரர்கள் படித்தால் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்ற வேண்டும் என மனுதர்மத்தில் சொல்லப்படுகிறது. அது பட்டியலினத்தவர்களை பழங்குடியினரை சொல்லவில்லை.தங்களை சத்திரியர்கள் என்று சொல்லிக்கொள்ளும் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவை சேர்ந்த சூத்திரருக்குத்தான் கோபம் வர வேண்டும்.உண்மையான எதிராளிகளை அவர்கள் அடையாளம் காட்டவில்லை.சனாதன பார்ப்பன சக்திகளுக்கு 2024- ல் வாய்ப்பு ஏற்படுவதை தடுக்க மார்க்சிய அம்பேத்கரிய பெரியாரிய உணர்வாளர்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்" என்றார்.
த.பெ.தி.க கோவை ராமகிருஷ்ணன் பேசியதாவது: மார்க்சிய, அம்பேத்கரிய, பெரியாரிய தத்துவங்களையும் கருப்பு, சிவப்பு, நீலம் என மூன்று நிறங்களையும் இம்மாநாடு ஒருங்கிணத்துள்ளது. தந்தை பெரியார் ரஷ்யா சென்றபோது பொதுவுடமை தத்துவத்தின் மகிமையை கண்டு அங்கேயே தங்கிவிடலாம் என நினைத்தபோது ரஷ்யா அனுமதிக்கவில்லை. அதன் பாதிப்பில் தமிழக குழந்தைகளுக்கு ரஷ்யா, ஸ்டாலின் என பெயர் வைத்தார்.ஒருவேளை ரஷ்யா அனுமதித்திருந்தால் பெரியார் அங்கிருந்திருந்தால், நாம் காவிக்கூட்டத்தின் நடுவில் இருந்திருப்போம். பெரியார் இங்கிருந்ததால் எழுச்சி பெற்றுள்ளோம் என்றார்.
மே 17 இயக்க திருமுருகன் காந்தி பேசியதாவது, சாதியாக மதமாக கட்சியாக பிரித்து பார்த்து தமிழகத்தில் வெற்றி பெறலாம் என காவி கூட்டம் நினைத்தது. ஆனால் நாம் அதை முறியடித்தோம்.நம்மைப் போன்ற இயக்கங்களூம் கட்சிகளும் தான் தமிழகத்தின் எதிர்காலம். எந்த வர்ணத்தை எடுத்தால் காவி ஒழியுமோ அதை கையில் எடுக்க வேண்டும். காவியை மூன்று நிறங்களை கொண்டு விரட்டி அழிக்க வேண்டும். தமிழகத்தில் ஜனநாயக இயக்கங்கள் இணைந்து இருப்பதால் பாசிச சக்திகள் வெற்றி பெற முடியவில்லை என்றார்.
தி.வி.க தலைவர் கொளத்தூர் மணி, சனாதன சக்திகள் தமிழகத்தில் அரசியல் களத்தில் வெற்றி பெறாமல் இருந்தாலும் சித்தாந்தத்தில் வெற்றி பெற்றுகொண்டுதான் இருக்கிறார்கள்.தமிழகத்தில் அனைவரையும் இந்துக்களாக மாற்றும் பணியில் வெற்றிகண்டே தான் இருக்கிறார்கள். அனைவரும் கொள்கை ரீதியாக ஒன்றுபட்டு வெற்றி காண்போம் என்றார்.
மதுரை எம்.பி சு.வெங்கடேசன், இது எம் மதுரை மட்டுமல்ல செம்மதுரை என காலம் உள்ளவரை நிருபித்து வருகிறோம். வைகையில் ஒடுவது நீரல்ல அது தியாகிகளின் ரத்தம். வர்க்க ஆதிக்கத்தை, வருண பேதத்தை எதிர்த்த தியாகிகளின் ரத்தம் வைகையில் ஓடுகிறது. வேதப்பண்பாட்டுக்கும் வர்ண பண்பாட்டுக்கும், சமஸ்கிருத ஆதிக்கத்திற்கும் எதிராக 2500 வருடங்களுக்கு முன்பிருந்தே ஒலிக்கும் முதல் குரலாக மதுரை உள்ளது.இங்கே மதங்கள் குறித்து பேசினால் கூட தமிழின் தனித்தன்மையோடு பேச வேண்டி உள்ளது.
மீனாட்சி அம்மன் கோயிலில் மொத்தம் 78 கல்வெட்டுகளில், அதில் 77 தமிழில் உள்ளது. வர்க்க வர்ண சமஸ்கிருத ஆதிக்கத்திற்கு எதிரான குறியீடு அன்னை மீனாட்சி. பிரதமர் மோடி எவ்வளவு புகைப்படம் எடுத்தாலும் அதில் ஒன்று கூட ஒன்றிய அரசின் போட்டோ டிவிஷனால் எடுக்கப்படவில்லை, எல்லாம் தனியார் நிறுவனத்தால் எடுக்கப்பட்டுள்ளது. தனியார் முதலாளிகளுக்காகவே வாழ்ந்து, அவர்களுக்காக இந்த ஆட்சியை பிரதமர் மோடி நடத்திகொண்டிருக்கிறார் என்றார் சு.வெங்கடேசன்
கூட்டத்தில் சி.பி.எம், சி.பி.ஐ, தி.வி.க, த.பெ.தி.க, தமிழ்ப்புலிகள், ஆதித்தமிழர் பேரவை, ம.ம.க, மே 17 இயக்கம், கொங்கு இளைஞர் பேரவை, எஸ்.டி.பி.ஐ தலைவர்கள் கலந்து கொண்டு பேசினார்கள்.இந்த கூட்டத்தை மத்திய, மாநில உளவுத்துறையினர் உன்னிப்பாக கவனித்து அரசுக்கு ரிப்போர்ட் அனுப்பி வைத்துள்ளார்களாம். இதற்கு போட்டியாக பாஜகவினர் அடுத்த மாதம் மிகப்பெரிய கூட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu