அதிகாரி மீது நடவடிக்கை : பிடிவாரண்ட் நிலுவையால் மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு
பைல் படம்
மதுரை நான்கு ஆண்டுகளுக்கு மேல் பிடிவாரன்ட் நிலுவையில் இருப்பதற்கு காரணமான போலீஸ் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தென் மண்டல ஐ.ஜி -க்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
தேனி, அல்லிநகரத்தைச் சேர்ந்த செல்வம் உட்பட சிலரிடம், 2021 டிசம்பரில், மதுரை விரகனுாரில் 21 கிலோ கஞ்சாவை, சிலைமான் போலீசார் பறிமுதல் செய்தனர்.
கைதான செல்வம் ஜாமின் மனு தாக்கல் செய்தார். அதை நீதிபதி பி.வேல்முருகன் விசாரித்தார்.மனுதாரர் தரப்பில், 'சம்பவத்திற்கும், மனுதாரருக்கும் தொடர்பில்லை. சம்பவ இடத்தில் மனுதாரர் இல்லை என்பதை கண்காணிப்பு கேமரா பதிவு தெளிவுபடுத்துகிறது என, தெரிவிக்கப்பட்டிருந்தது.அரசு தரப்பில், 'விசாரணை ஆரம்ப கட்டத்தில் உள்ளது. மனுதாரருக்கு எதிராக இரண்டு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
நீதிபதி பிறப்பித்த உத்தரவு: கடந்த 2014ல் பதிவான மற்றொரு வழக்கில் மனுதாரருக்கு எதிராக ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் நிலுவையில் உள்ளது. இவ்வழக்கில் மனுதாரர் 2021 டிசம்பரில் கைது செய்யப்பட்டது அதிர்ச்சி, ஆச்சரியம் அளிக்கிறது. காவல்துறை கவனம் செலுத்தாமல் செயல்படுவது, குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவிக்க, இதுபோன்ற செயல்கள் வழிவகுக்கிறது என்பதற்கு சிறந்த முன்னுதாரணம். காவல்துறையின் அணுகுமுறை ஏற்புடையதல்ல.
மனுதாரர் ஜாமினில் வெளி வந்தால், இதுபோன்ற குற்றத்தில் ஈடுபட வாய்ப்புள்ளது. குற்றத்தின் தீவிர தன்மையை கருதி ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரி மீது தென் மண்டல போலீஸ் ஐ.ஜி. நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu