தமிழக திருக்கோவில்கள் திறப்பு எப்போது? அமைச்சர் சேகர் பாபு விளக்கம்

தமிழக திருக்கோவில்கள் திறப்பு எப்போது? அமைச்சர் சேகர் பாபு விளக்கம்
X

கண்புரை நோயால் பாதிக்கப்பட்டுள்ள மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் யானை பார்வதியை பார்வையிட்ட அமைச்சர் சேகர்பாபு.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தீ விபத்து ஏற்பட்ட வீரவசந்த ராய மண்டபம் சீரமைப்புக்கு பிறகு, குடமுழுக்குக்கான பணிகள் துவங்கும். கொரோனா உயிரிழப்பு நீங்கியதும் கோவில்கள் திறக்கப்படும் என்று இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் யானை பார்வதி, கண்புரை நோயால் பாதிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று மதுரை வந்திருந்தார்.

பின்னர் செய்தியாளர்களை அமைச்சர் அளித்த பேட்டி: கோவில் யானைக்கு தேவையான சிகிச்சைகளை மேற்கொள்வதற்காக முயற்சி மேற்கொண்டு வருகிறோம். தேவைப்பட்டால் வெளிநாட்டு மருத்துவர்களின் ஆலோசனை பெறப்படும். தமிழக திருக்கோவில்களில் தற்போது 30 யானைகள் உள்ளன. அவை அனைத்தையும் முறையாக பராமரித்து பாதுகாப்பது இந்து சமய அறநிலையத் துறையின் கடமை ஆகும். அதனை அரசு சிறப்புடன் செய்யும்.

கடந்த 2019ஆம் ஆண்டு தீ விபத்தால் பாதிக்கப்பட்ட வீர வசந்த ராயர் மண்டபம் கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு பணிகள் தொடங்கி அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் நிறைவு பெறும். அதற்குப் பிறகு மதுரை மீனாட்சி கோவில் குடமுழுக்கு பணிகள் துவங்கும்.

மலைக்கோயில்களில் முதியோர்களும் சென்று தரிசனம் செய்வதற்கு வசதியாக முன்னாள் முதல்வர் கருணாநிதி கடந்த 2010ஆம் ஆண்டு ரோப் கார் வசதி ஏற்படுத்திக் கொடுத்தார். எனஏ, ரோப்கார் வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும். அனைத்து இந்து அறநிலைத்துறை கோவில்களிலும், சித்த மருத்துவமனை உருவாக்கப்படும்.

ஆக்கிரமிக்கப்பட்டுள்ள திருக்கோவில் சொத்துக்கள் அனைத்தையும் சட்டபூர்வமாக மீட்டு அதன் வருமானம் வேறு எங்கேனும் மடைமாற்றப்பட்டு இருந்தால் அவற்றையும் கண்டறிந்து குற்றவாளிகள் யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

திருக்கோவில் நகை உள்ளிட்ட விலை உயர்ந்த ஆபரணங்கள் குறித்து பொதுவெளியில் தகவல் தெரிவிப்பது, அதன் பாதுகாப்பு தன்மைக்கு உகந்ததல்ல. ஆனால் அவற்றை பாதுகாக்கக்கூடிய பாதுகாப்பு அறைகளை 108 இடங்களில் தமிழக அரசு கட்ட உள்ளது. அந்த அறையின் மாதிரி வடிவத்தை முதலமைச்சரின் பார்வைக்கு அனுப்பி ஒப்புதல் பெற்றதும், கட்டப்படும்.

பெருந்தொற்று பேரிடர் காலத்தில் இனி ஒரு உயிர் இழப்பும் இல்லை என்பதை உறுதி செய்த பின்னர் திருக்கோயில்கள் அனைத்தும் பக்தர்களுக்காக திறந்துவிடப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!