மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவில் சித்திரை பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது. கொரோனா பரவல் காரணமாக இந்த விழாவில் பங்கேற்க பொதுமக்கள் அனுமதிக்கப்படவில்லை.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா இன்று காலை 10.29 மணியிலிருந்து 11 29 மணிக்குள் கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற ஏப்ரல் 26-ம் தேதி வரை 12 நாட்கள் திருவிழா நடக்கிறது. சித்திரைப் பெருந்திருவிழாவின் எட்டாம் நாளான ஏப்ரல் 22ம் தேதி பட்டாபிஷேகமும், ஒன்பதாம் நாளான ஏப்ரல் 23ஆம் தேதி திக் விஜயமும், பத்தாம் நாளான ஏப்ரல் 24ஆம் தேதி திருக்கல்யாணமும், 11ம் நாளான ஏப்ரல் 25ஆம் தேதி சட்டத்தேர் நிகழ்வும் நடைபெற உள்ளன.

கொடியேற்றத்தையொட்டி சாமி சன்னதியில் உள்ள கம்பத்தடி மண்டபம் அழகிய மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அங்கு பட்டர்கள் யாகம் வளர்த்து சிறப்பு பூஜை செய்தனர். கொடிமரத்திற்கு பால், பன்னீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்து, யாக பூஜையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனிதநீர் ஊற்றப்பட்டது.அப்போது மீனாட்சி அம்மனும், சுந்தரேசுவரரும் வெள்ளி சிம்மாசனத்தில் கொடிமரம் அருகே எழுந்தருளினர்.

கொடியேற்றம் நடந்த பிறகு மேலே இருந்து மலர்கள் தூவப்பட்டன. பின்னர் சிறப்பு தீபாராதனை நடந்தது. கொடியேற்ற நிகழ்ச்சியில் மீனாட்சி அம்மன் கோவில் தக்கார் கருமுத்து கண்ணன், மாநகர காவல்துறை ஆணையர் பிரேம் ஆனந்த் சின்கா, கோவில் இணை ஆணையர் செல்லத்துரை ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai solutions for small business