தமிழகத்தில் 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டங்கள் முறையாக நடைபெறவில்லை.. நீதிபதிகள் கருத்து...
உயர் நீதிமன்ற மதுரை கிளை. (கோப்பு படம்).
தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தாருகாபுரம் பஞ்சாயத்தில் மகாத்மா காந்தி 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் பணிகள் நடந்து வருகின்றன.
அந்தப் பணிகளுக்கு பொறுப்பாளராக சுப்புலட்சுமி நியமிக்கப்பட்டு உள்ளார். மேலும், தாருகாபுரம் பஞ்சாயத்து மெம்பர் முருகலட்சுமி என்பவரும் பணியாற்றி வருகிறார். பொறுப்பாளர்கள் 3 மாதம் (90 நாட்கள்) மட்டுமே பொறுப்பில் பணி செய்ய வேண்டும். ஆனால், முருகலட்சுமியும், சுப்புலட்சுமியும் கடந்த 7 மாத காலமாக பணியில் இருந்து நீக்கப்படாமல் தொடர்ந்து வேலை செய்து வருகின்றனர். முருகலட்சுமி என்பவரின் தகப்பனார் ராமச்சந்திரன் என்பவர் விவசாயம் செய்து வருகிறார். சுப்புலட்சுமி மற்றும் முருகலட்சுமி ஆகியோர் இணைந்து 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் வேலை செய்யும் பணியாளர்களைக் கொண்டு ராமச்சந்திரன் என்பவரின் விவசாய நிலத்தில் கரும்புகளுக்கு உரம் வைத்தல், தென்னை மரங்கள் பராமரிப்பது, போன்ற வேலைகளில் ஈடுபடுத்தி வருகின்றனர்.
இதனால் அரசுக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்படுகிறது. எனவே, அரசுக்கு இழப்பை ஏற்படுத்திய நபர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும், 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை முறைப்படுத்த உத்தரவிட வேண்டும்" என மனுவில் தெரிவித்து இருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விஜயகுமார் ஆகியோர் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், 100 நாள் வேலைவாய்ப்பு திட்டப் பணியாளர்கள் தனியார் நிலத்தில் வேலை செய்த புகைப்படங்கள், நேரம், இடம் ஆகிய ஆதாரத்துடன் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
இதனையடுத்து நீதிபதிகள் கூறியதாவது:
100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் பணியாற்றும் பணியாளர்கள் தனியார் நிலத்தில் வேலை செய்ததை மனுதாரர் ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளார். தமிழ்நாடு முழுவதும் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டங்கள் முறையாக நடைபெறவில்லை. இந்த வழக்கில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை செயலாளரை இணைக்க உத்தரவிடுகிறோம்.
மேலும், 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் நடைமுறைகள் தொடர்பாகவும், வழக்கு குறித்தும் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை செயலாளர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஜனவரி 4 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu