மின் மயானத்தில் வரிசையாக பிணங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருப்பது போன்ற காட்சி..வைரல்
மதுரையில் கொரோனா காலத்திற்கு முன்பு சராசரியாக 15 - 25 இறப்புகள் பதிவாகி வந்தன.
தற்போது கொரோனா பாதிப்பின் காரணமாக இரட்டை இலக்கத்தில் இறப்புகள் பதிவாகி வருகின்றன. கடந்த 5 நாட்களில் மட்டும் 62 பேர் கொரோனாவால் இறந்துள்ளதாக சுகாதாரத்துறை அறிக்கை கூறுகிறது.
ஆக, சராசரி இறப்புகள், கொரோனா இறப்புகள், கொரோனா அல்லாத இறப்புகள் என நாளொன்றுக்கு சராசரியாக 60 மரணங்கள் பதிவாகி வருகின்றன.
மதுரை மாநகராட்சியை பொறுத்த வரைக்கும் தத்தனேரி, கீரைத்துறை ஆகிய இரண்டு இடங்களில் மின் மயானங்கள் இயங்கி வருகின்றன.
தற்போது, தத்தனேரி மயானத்தில் மட்டும் அதிகமான பிணங்களும், கீரைத்துறை மயானத்தில் குறைவான பிணங்களும் எரிக்கப்பட்டு வந்தன.
அரசு மருத்துவமனையில் இறக்கும் நபர்களின் உடல்களை மொத்தமாக தத்தனேரி மயானத்திற்கே கொண்டு செல்லாமல், கீரைத்துறை மயானத்திற்கும் பிரித்து அனுப்பும்படி மாநகராட்சி அறிவுறுத்தி உள்ளது.
அதன்படி, இரண்டு நாட்களாக பிணங்கள் பிரித்து கீரைத்துறை மயானத்தில் எரிக்கப்பட்டு வருகின்றன. இந்த மயானத்தை ரோட்டரி கிளப் சார்பில் இயக்கி வருவதால், இரவில் எரியூட்டும் பணிகள் நடைபெறுவதில்லை என்பதாலும், பிணங்கள் பதப்படுத்தி வைக்கும் குளிர்சாதன பெட்டிகள் இல்லாததாலும் அங்கு பிணங்கள் தேங்கியுள்ளன. அப்படி, நேற்று (மே11) வந்து தேங்கியிருந்த பிணங்கள் தான் அந்த வீடியோ காட்சியில் இருப்பவை. நேற்று (மே 11) மட்டும் 45 பிணங்கள் கீரைத்துறை மயானத்தில் எரியூட்டப்பட்டு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், கீரைத்துறை மயானத்தில் 24 மணி நேரமும் எரியூட்டும் பணிகள் நடைபெற துவங்கியுள்ளதாகவும், குளிர்சாதன பெட்டி வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்த மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள், மக்கள் அந்த வீடியோவால் தேவையற்ற அச்சம் அடைய தேவையில்லை என்றும் கூறியுள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu