கள்ளழகர் எழுந்தருளும் ஆயிரம் பொன் சப்பரத்தின் வரலாறு தெரியுமா?

கள்ளழகர் எழுந்தருளும் ஆயிரம் பொன் சப்பரத்தின் வரலாறு தெரியுமா?
X

கள்ளழகர் எழுந்தருளும் ஆயிரம் பொன் சப்பரம் 

தல்லாகுளம் கருப்பண்ணசாமி கோயிலின் எதிரே அமைந்துள்ள ஆயிரம் பொன் சப்பரத்தில் கள்ளழகர் நாளை எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரைத் திருவிழாவில் சிகர நிகழ்ச்சியாக கருதப்படும் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு நாளை (செவ்வாய்க்கிழமை) அதிகாலை நடைபெற உள்ளது. இதில் தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்கின்றனர்.

இந்நிலையில், மதுரை தல்லாகுளம் கருப்பண்ணசாமி கோயிலின் எதிரே உருவாக்கப்பட்டுள்ள ஆயிரம் பொன் சப்பரத்தில் நூறாண்டுகளுக்கு பிறகு தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக நாளை அதிகாலை 2.30 மணி முதல் 3.00 மணி வரை எழுந்தருள்கிறார். விஜயநகரப் பேரரசு மதுரையை ஆண்ட காலத்தில், அதன் மன்னர்களில் முக்கியமானவராகக் கருதப்படும் திருமலை நாயக்கர், கள்ளழகருக்கு தேர் செய்து காணிக்கையாக வழங்க வேண்டும் என்ற விருப்பம் கொண்டிருந்தார்.

ஆனால், அழகர் கோயிலில் ஏற்கனவே தேர் இருந்ததால், புதிதாக மற்றொரு தேருக்கு கோயிலின் ஆகமவிதிகள் இடம் தரவில்லை. ஆகையால், தேர் போன்ற அமைப்பில் சப்பரம் ஒன்றை உருவாக்கித் தர சிற்ப வல்லுநர் ஒருவருக்கு உத்தரவிட்டிருந்தார். தான் நினைத்ததைவிட மிகச் சிறப்பாக அந்த சப்பரத்தை உருவாக்கித் தந்த சிற்பிக்கு ஆயிரம் பொன்னை பரிசாக வழங்கி மன்னர் சிறப்பித்ததாகவும், அதன் அடிப்படையிலேயே இந்த சப்பரம் ஆயிரம் பொன் சப்பரம் என பெயர் பெற்றதாகவும் கூறப்படுகிறது.

கடந்த நூறாண்டுகளுக்கு முன்பு வரை இந்த சப்பரத்தில்தான் கள்ளழகர் வைகையாற்றுக்குள் எழுந்தருளியதாகவும், பிறகு தங்கக் குதிரை பயன்படுத்தப்பட்டதாகவும், இதனால் நாளடைவில் சப்பரத்தின் பயன்பாடு குறைந்து, கள்ளழகர் நிகழ்வில் வெறுமனே சம்பிரதாயத்தின் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் சிறிதாக செய்து வைக்கப்பட்டு கருப்பண்ணசாமி கோயில் அருகே நிறுத்தி வைக்கப்பட்டது.

முதன்முறையாக பழங்கால முறைப்படி அலங்கரிக்கப்பட்ட ஆயிரம் பொன் சப்பரத்தில் நூறாண்டுகளுக்கு பிறகு கடந்த ஆண்டு கள்ளழகர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டும் நாளை அதிகாலை 2.30 மணி அளவில் ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் அளிக்கிறார்.

பிறகு ஆழ்வார்புரம் மூங்கில் கடை தெரு வழியே பயணித்து ஆல்பர்ட் விக்டர் மேம்பாலம் அருகே உள்ள வைகை ஆற்றில் அதிகாலை 5.51 மணி முதல் 6.10 மணிக்குள் எழுந்தருள்கிறார். பிறகு காலை 7.25 மணிக்கு அருள்மிகு வீரராகவப் பெருமாளுக்கு மாலை சாற்றி ராம ராயர் மண்டபம் நோக்கி புறப்படுகிறார். பிற்பகல் 12 மணியளவில் கள்ளழகருக்கு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறுகிறது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!