மதுரை நீதிமன்றத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி நேரில் ஆஜர்

மதுரை நீதிமன்றத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி நேரில் ஆஜர்

மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி நேரில் ஆஜராகினார்.

வட்டாட்சியரை தாக்கிய வழக்கு தொடர்பான விசாரணைக்காக முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி உள்ளிட்டோர் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினர்.

மறைந்த திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் மகன் மு.க. அழகிரி. இவர், மதுரையில் வசித்து வருகிறார். முன்னாள் மத்திய அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். மு.க. அழகிரி கடந்த சில ஆண்டுகளாக அரசியலில் தீவிர ஈடுபாடு இல்லாமல் இருந்து வருகிறார்.

கடந்த அதிமுக ஆட்சியில் மு.க. அழகிரி மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. சில வழக்குகள் மட்டுமே நிலுவையில் உள்ளன. அதன்படி, கடந்த 2011 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள வெள்ளலூர் அம்பலக்காரன்பட்டி வல்லடிகாரர் கோயிலுக்குள், கிராமத் தலைவர்கள் மற்றும் பொதுமக்களிடம் மு.க. அழகிரி ஆலோசனை நடத்தினார். அப்போது கோயில் கதவுகள் அடைக்கப்பட்டன.

தேர்தலில் ஓட்டு வாங்க அழகிரி பணம் பட்டுவாடா செய்வதாக அதிமுகவினர் புகார் தெரிவித்தனர். இதனையடுத்து மேலூர் தேர்தல் அதிகாரியும் தாசில்தாருமான காளிமுத்து மற்றும் தேர்தல் அலுவலர்கள், வீடியோ கேமராமேனுடன் அங்கு சென்று வீடியோ எடுத்தனர்.

இதற்கு அழகிரி தரப்பு கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். அழகிரியுடன் இருந்தவர்கள் தன்னை அடித்து, உதைத்ததாக தாசில்தார் காளிமுத்து கீழவளவு காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதனையடுத்து மு.க. அழகிரி, மதுரை துணை மேயர் மன்னன் மற்றும் திமுகவைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகளான ரகுபதி, திருஞானம் உள்ளிட்ட 21 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இது தொடர்பான வழக்கு விசாரணை மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், வழக்கு விசாரணை நீதிபதி லீலாபானு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி மற்றும் திமுக நிர்வாகிகள் சிலர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினர்.

வழக்கு தொடர்பாக மூன்று சாட்சியங்களிடம், வழக்கறிஞர்களிடம் சில கேள்விகளை நீதிபதி லீலா பானு கேட்டார். இதை தொடர்ந்து வழக்கு விசாரணையை மார்ச் 6 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார். மதுரை மாவட்ட நீதிமன்றத்திற்கு அழகிரி வருகை தந்ததையடுத்து அவரது ஆதரவாளர்கள் அதிகளவில் திரண்டதால் அங்கு பரபரப்பு நிலவியது.

Tags

Read MoreRead Less
Next Story