புரட்சி தலைவர், புரட்சி தலைவி வரிசையில் புரட்சி தமிழர் ஆனார் எடப்பாடி பழனிசாமி
அ.தி.மு.க.வின் பொன்விழா எழுச்சி மாநாடு மதுரை கப்பலூர் அருக வலையங்குளத்தில் இன்று நடைபெற்றது. இதில், அ.தி.மு.க. பொதுச் செயலாளருக்கு ‘புரட்சி தமிழர்’ என பட்டம் வழங்கப்பட்டது. தொடர்ந்து, அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை மீண்டும் முதல்வராக்க சபதம் ஏற்போம் என்பது உள்ளிட்ட 32 தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.
மதுரை அ.தி.மு.க. பொன்விழா எழுச்சி மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:-
எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் அரசியல் வாரிசாக எடப்பாடி பழனிசாமி திகழ்கிறார். அ.தி.மு.க.விற்கு இரண்டு கோடிகளுக்கு மேல் உறுப்பினர் சேர்க்கைக்காக அனைத்து நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் பாராட்டுகள். இந்தியாவிலேயே 2 கோடிக்கும் மேல் உறுப்பினர் எண்ணிக்கை கொண்ட ஒரே இயக்கம் அ.தி.மு.க. திருக்குறளை தேசிய நூலாக மத்திய அரசு அங்கீகரிக்க வேண்டும்.
தமிழகத்தில் அனைத்து கல்வி நிறுவனங்களிலும் தமிழ் வழிக் கல்வியை மத்திய அரசு கொண்டு வர வேண்டும். தமிழை அரசியல் அமைப்புச் சட்டம் மூலம் மத்திய அரசு ஆட்சி மொழியாக்க வேண்டும். புதுச்சேரியை மாநிலமாக மத்திய அரசு அங்கீகரிக்க வேண்டும்.
மின்கட்டண உயர்வுக்கு தமிழக அரசுக்கு கண்டனம். மகளிர் உரிமைத் தொகை வழங்க கட்டுப்பாடுகள் பல விதித்த தமிழக அரசுக்கு கண்டனம். வாக்குறுதிகளை நிறைவேற்றாத தமிழக அரசுக்கு கண்டனம். இந்தியாவிலேயே தமிழகத்தை அதிக கடன் வாங்கிய மாநிலமாக மாற்றிய தமிழக அரசுக்கு கண்டனம்.
விவசாயிகளுக்கு எதிரான போக்கை கடைபிடிக்கும் தமிழக அரசுக்கு கண்டனம். மேகதாது அணை கட்டும், அவர்களது கூட்டணி கட்சி காங்கிரஸ் கர்நாடக அரசை கண்டிக்கத் தவறும் தமிழக அரசை கண்டித்து தீர்மானம். கச்சத்தீவை மீட்க மத்திய அரசுக்கு அழுத்தம் தராத தமிழக அரசை கண்டிப்பது.
தமிழகத்தில் தொழில் வளத்தை அகல பாதாளத்திற்கு கொண்டு தமிழக அரசை கண்டித்து தீர்மானம். நெசவாளர்களுக்கு எதிரான விரோதப் போக்கை கடைபிடிக்கும் தமிழக அரசை கண்டித்து தீர்மானம். உள்ளாட்சி அமைப்புகளின் நிதியை அரசே எடுத்து, வேறு பல திட்டங்களுக்கு செலவழிக்கும் தமிழக அரசை கண்டித்து தீர்மானம்.
காவிரி குண்டாறு நதிகளின் திட்டத்தைக் கிடப்பில் போட்டுள்ள தமிழக அரசைக் கண்டித்து தீர்மானம். கோதாவரி காவிரி இணைப்புத் திட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசை வலியுறுத்தாத தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம்.
பட்டியலின மக்களுக்கான நிதியை வேறு பல திட்டங்களுக்குப் பயன்படுத்தும் தமிழக அரசை கண்டித்து தீர்மானம். கடலில் பேனா சின்னம் அமைக்கத் துடிக்கும் தமிழக அரசை கண்டித்து தீர்மானம். அதிமுக நிர்வாகிகள் மீது போடும் பொய் வழக்குகளை எதிர்கொண்டு வெல்வோம் என தீர்மானம்.
அ.தி.மு.க. ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை முடக்காமல் செயல்படுத்த தமிழக அரசை வலியுறுத்துவது. இஸ்லாமிய சிறைவாசிகளை விடுவிக்க தமிழக அரசை வலியுறுத்துவது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு சட்ட சபையில் இழைத்த (சேலையைப் பிடித்து இழுத்த) அநீதியை மறைக்கும் முதல்வர் ஸ்டாலினை கண்டித்து தீர்மானம்.
அதிமுகவில் இருந்து துரோகிகளை களை எடுத்த பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு தெரிவித்து தீர்மானம். மக்கள் விரோத ஊழல் ஆட்சி நடத்தும் முதல்வர் ஸ்டாலின் அந்தப் பதவியில் இருந்து விலக தமிழக அரசை வலியுறுத்தி தீர்மானம்.
2024 ஆம் ஆண்டில் நடைபெற உள்ள நாடாளுமன்ற பொதுத் தேர்தலில், எடப்பாடி பழனிச்சாமி வகுத்து தரும் திட்டங்களின் படி, அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய பாடுபடுவது. அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமியை தமிழக முதல்வராக்க சபதம் ஏற்போம் என மாநாட்டில் மொத்தம் 32 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu