மதுரையில் திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மு.க.ஸ்டாலின் தீவிர பிரசாரம்
தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பரப்புரைப் பயணத்தின்போது, மதுரை - பழங்காநத்ததில் பொதுமக்களிடையே உரையாற்றி வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது.
மதுரை மேற்கு தொகுதியில் போட்டியிடும் சின்னம்மாள் அவர்கள் ஒரு எளிமையான வேட்பாளர். அவரை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளர், அவரை கோமாளி மந்திரி என்று சொல்வதா, காமெடி மந்திரி என்று சொல்வதா? 'தெர்மாகோல் புகழ்' செல்லூர் ராஜூ, அவர்தான் நிற்கிறார். எனவே ஒரு அமைச்சரை எதிர்த்து நம்முடைய சின்னம்மாள் அவர்களை நிறுத்தி இருக்கிறோம். அந்த அமைச்சருக்கு பாடம் புகட்ட, அவர்கள் அடித்துக் கொண்டிருக்கும் கொள்ளைகளுக்கு முடிவுகட்ட, நம்முடைய மகளிர் அணியைச் சார்ந்த சின்னம்மாள் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்திலும்,
மதுரை மத்திய தொகுதியில் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் அவர்கள், ஏற்கனவே மதுரை மத்திய தொகுதியில் வென்று, சட்டமன்றம் சென்று, அளப்பரிய சாதனைகளை தொடர்ந்து செய்துகொண்டு இருப்பவர். எனவே அந்த சாதனைகள் தொடர இந்த தொகுதி மக்களின் வாழ்வின் முன்னேற்றத்திற்கு வழிகாண அவருக்கு உதயசூரியன் சின்னத்திலும், மதுரை வடக்கு தொகுதியில் தளபதி அவர்கள், அவரும் ஒருமுறை சட்டமன்ற உறுப்பினராக இருந்து அந்த தொகுதி மக்களுடைய முன்னேற்றத்திற்கு பாடுபட்டவர் பணியாற்றியவர். இன்றைக்கு மாவட்டத்தின் பொறுப்பாளராக இருந்து பணியாற்றிக் கொண்டிருப்பவர். அவருக்கு உதயசூரியன் சின்னத்திலும், மதுரை தெற்கு தொகுதியில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராக - நம்முடைய அருமை அண்ணன் வைகோ அவர்களால் அடையாளம் காட்டப்பட்டு இங்கே நிறுத்தப்பட்டிருக்கும் சகோதரர் பூமிநாதன் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்திலும் ஆதரவு தந்து மாபெரும் வெற்றியைத் தேடித் தர வேண்டும்.
உங்களிடத்தில் உரிமையோடு ஓட்டு கேட்க வந்திருக்கிறேன். உரிமையோடு என்றால் தேர்தலுக்காக மட்டும் வருகிறவன் இந்த ஸ்டாலின் அல்ல, எப்பொழுதும் - எந்த நேரத்திலும் - எந்த சூழ்நிலையிலும் வருகிறவன். இப்போது நான் முதலமைச்சர் வேட்பாளராக வந்திருக்கிறேன். அதுதான் முக்கியம். எனவே தான் அந்த உரிமையோடு உங்களிடத்தில் ஓட்டு கேட்க வந்திருக்கிறேன்.
நீங்கள் தயவுசெய்து ஒன்றை நினைத்துப் பார்க்க வேண்டும். அ.தி.மு.க. வெற்றி பெறுவதும் பா.ஜ.க. வெற்றி பெறுவதும் ஒன்றுதான். பா.ஜ.க. உறுப்பினராக வரவேண்டும் என்ற அவசியம் இல்லை; அ.தி.மு.க. வெற்றி பெற்றாலும் அவர்கள் பா.ஜ.க. உறுப்பினர் தான்.
ஏற்கனவே நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் 39 இடங்களில் 38 இடங்களில் தமிழ்நாட்டில் வெற்றி பெற்றோம். அதில் தேனி தொகுதியில் அ.தி.மு.க. எம்.பி. ஒருவர் வெற்றி பெற்றார். அவர் அ.தி.மு.க. எம்.பி. அல்ல; பா.ஜ.க. எம்.பி.யாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.
எனவே அ.தி.மு.க. வெற்றி பெறக் கூடாது. பா.ஜ.க.வும் வெற்றி பெறக்கூடாது. அதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். எனவே ஒரு பா.ஜ.க. எம்.எல்.ஏ. வந்தாலும் அது எந்த அளவிற்கு நாட்டுக்கு கெடுதல் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும்.
தமிழ்நாட்டில் இப்போது பா.ஜ.க.வின் ஒரு உறுப்பினர் கூட இல்லாமல், சட்டமன்றத்திலும் - மக்கள் மன்றத்திலும் இன்றைக்கு அ.தி.மு.க.வின் ஆட்சி நடைபெற்றாலும், தமிழ்நாட்டில் இப்போது பா.ஜ.க. ஆட்சி தான் நடந்து கொண்டிருக்கிறது.
எனவே உதவாக்கரை என்று கேள்விப்பட்டிருப்பீர்கள் அல்லவா அதுதான் பழனிசாமி. தமிழ்நாட்டை இன்றைக்கு அடமானம் வைத்து இருக்கிறார். நம்முடைய உரிமைகளை எல்லாம் ஒவ்வொன்றாக போய்க்கொண்டிருக்கிறது.
காவிரியின் உரிமையை நிலைநாட்ட முடியவில்லை. நீட் தேர்வை தடுக்க முடியவில்லை. ஜி.எஸ்.டி. வரியை குறைக்க முடியவில்லை. தமிழ்நாட்டிற்கு வந்து சேர வேண்டிய நிதியை முறையாக பெற முடியவில்லை. ஆகவே திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களித்து அதிக பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் இவ்வாறு அவர் பேசினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu