கொரோனா மூன்றாவது அலையை எதிர்கொள்ள முன்மாதிரி திட்டம் - அமைச்சர் தகவல்
நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்
கொரோனா தொற்று பரவல் மூன்றாவது அலையை எதிர்கொள்வதற்கான முன்மாதிரி திட்டத்தை மதுரை மாவட்டத்தில் அமல்படுத்த உள்ளதாக நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.
கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வணிகவரி அமைச்சர் பி. மூர்த்தி, நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் மாவட்டஆட்சியர் எஸ். அனீஷ்சேகர் மற்றும் அனைத்துத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டத்தை நடத்தினார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அடுத்த கட்டமாக மேற்கொள்ள வேண்டியவை குறித்துத் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தின் நிறைவில் செய்தியாளர்களிடம் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியதாவது:
மதுரை மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. தற்போது உலக அளவில் பல்வேறு நாடுகளிலும் கொரோனா மூன்றாவது அலைக்கான வாய்ப்புகள் குறித்துத் பேசப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் தமிழகத்திலும் மூன்றாவது அலையை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் அதிகம் உள்ள பகுதிகள், இளைஞர்கள், முதியவர்கள் அதிகம் இருக்கும் பகுதிகள், நோய் எதிர்ப்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் அதிகம் இருக்கும் பகுதிகள் உள்ளிட்ட இடங்கள் மூன்றாவது அலையில் கொரோனா தாக்கத்துக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த விஷயங்களின் அடிப்படையில் மூன்றாவது அலையை எதிர் கொள்வதற்கான ஒரு முன்மாதிரி திட்டத்தை மதுரை மாவட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் அனுமதியோடு செயல்படுத்த உள்ளோம். மதுரை மாவட்டத்தில் மருத்துவ கட்டமைப்பு வசதிகளான படுக்கை வசதிகள் போதுமான அளவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
ஆக்ஸிஜன் உற்பத்திக்கான வசதிகள் அரசு மருத்துவமனைகளில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதுவரை 5 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ஆனால் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் விவரம் மத்திய அரசிடம் தான் உள்ளன. அந்த விவரங்களை கேட்டுபெற்று விடுபட்டவர்களுக்கு தடுப்பூசி போடுவதை தீவிரப்படுத்த உள்ளோம்.
அதோடு மதுரை மாவட்டத்தில் புதன்கிழமை முதல் தடுப்பூசி போட்டுக்கொள்பவர்களின் விவரங்கள் தனியாகப் பதிவு செய்யப்படும். கல்லூரி மாணவர்களுக்கு ஏற்கெனவே, மனநல ஆலோசகர்களாக செயல்படுவதற்கான பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன. இவர்கள் தங்களது பகுதியில் உள்ள முதியோர்களிடம் தினமும் பேசி அவர்களது உடல்நிலையை கண்காணித்து வருவர். இது போன்ற பல்வேறு நடவடிக்கைகள் இந்த முன்மாதிரி திட்டத்தில் செயல்படுத்தப்பட உள்ளன. இதன் தொடர்ச்சியாக மற்ற மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu