திமுகவின் ஊழல் ஆதாரங்களை வெளியிடுவேன்.. மதுரையில் அண்ணாமலை பேட்டி

திமுகவின் ஊழல் ஆதாரங்களை வெளியிடுவேன்.. மதுரையில் அண்ணாமலை பேட்டி
X

பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

திமுகவின் ஊழல் குறித்த ஆதாரங்களை இணையதளத்தில் வெளியிடுவேன் என மதுரையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

திராவிட கட்சிகளில் இருந்து நிர்வாகிகள் பாஜகவிற்கு வருவார்களா என எதிர்பார்த்த நிலை மாறி பாஜகவில் இருந்து திராவிட கட்சிக்கு செல்லும் நிலை உருவாகி உள்ளது. பாஜகவில் இருந்து செல்லும் நிர்வாகிகளை வாழ்த்தி வழியனுப்பி வைப்பது தான் மரபு.

தமிழ்நாடு உட்பட தென் மாநிலங்களில் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே மீண்டும் மீண்டும் பதவி வகித்து வருகிறார்கள். தமிழகத்தில் தேசிய கட்சிகளின் தலைவர்கள் மேனேஜர் போல இருப்பார்கள். அண்ணாமலை என்பவர் தலைவன், தலைவனுக்கே உரிய பண்புகளில் முடிவு எடுப்பேன்.

கலைஞர், ஜெயலலிதா போல சில அதிரடி முடிவுகளை எடுக்க தான் வேண்டும். டெல்லியில் சொல்லி கொடுத்து விடுவார்கள் என கவலை கொள்ளாமல் நடவடிக்கைகள் எடுத்து வருகிறேன். பாஜகவில் இருப்பவர்களை தலைவர்களாக மாற்றி வருகிறோம்.

அரசியலில் ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு. தமிழகத்தில் பாஜக தெளிந்த நீரோடையாக செயலாற்றி வருகிறது. தமிழக அரசியல் வரலாற்றில் என்னை போன்று தாக்கப்பட்ட தலைவர் வேறு யாரும் இல்லை. சில பத்திரிகைகளை திறந்தால் என்னை பற்றி தான் செய்தி இருக்கும்.


காவல்துறை நடுநிலையுடன் இருந்தது. தற்போது என் மீது வழக்கு பதிந்து ஒரு சார்பாக சென்று விட்டது, பஜகவின் இலக்கு 2026 என்பதை நோக்கியே பயணித்து வருகிறோம். அண்ணாமலை பாஜகவில் பதவிக்காக வரவில்லை. பெயருக்கு பின்னால் இருந்த ஐ.பி.எஸ் எனும் பட்டத்தை தூக்கி வீசி விட்டு வந்தேன்.

தமிழகத்தில் தமிழை, தமிழக மக்களை வைத்து தான் அரசியல் செய்ய முடியும். தமிழகத்தில் புது விதமான அரசியலை பாஜக மட்டுமே கொண்டு வர முடியும். பாஜகவின் இரண்டாம் கட்ட தலைவர்களை இழுத்து தான் தங்கள் கட்சியை வளர்க்க முடியும் எனும் நிலை வந்துள்ளது.

திமுகவில் ஒவ்வொரு அமைச்சர்களும் போட்டி போட்டு கொண்டு தங்களை அசிங்கப்படுத்தி கொண்டு இருக்கிறார்கள். தமிழகத்தின் பிரச்னைகளை தீர்க்கவே பாஜக செயல்படுகிறது. மாறாக பிரச்னைகளை உருவாக்க பாஜக செயல்படவில்லை. பாஜக மீது முதலமைச்சர் ஆக்கப்பூர்வமான குற்றச்சாட்டுகளை வைக்கவில்லை.

கோவை குண்டு வெடிப்பு தொடர்பாக ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதி முதல்வருக்கு தொலைபேசியில் அழைத்து சொன்னாலும் முதல்வர் சிலிண்டர் வெடித்தது என கூறுவார். சாமானிய மக்கள் மட்டுமே பேருந்து போக்குவரத்தை பயன்படுத்தி வருகிறார்கள். அதை தனியாருக்கு கொடுப்பது தவறு.

உதயநிதி ஸ்டாலினை நாம் ஒரு பொருட்டாக எடுத்து கொள்ள கூடாது. அவருக்கு நீட் தேர்வில் கேட்கப்படும் கணிதத்தை கூட போட தெரியாது. ஏப்ரல் 14 ஆம் தேதி திமுகவின் ஊழல் பட்டியலை வெளியிடுவேன். திமுகவினர் ஆட்சிக்கு வந்த பின் 2 லட்சம் கோடி அளவிற்கு ஊழல் செய்து உள்ளனர்.

திமுகவின் ஊழல் குறித்த ஆதாரங்கள் இணையதளத்தில் வெளியிடுவேன், அதிமுகவும், பாஜகவும் கொள்கையின் அடிப்படையில் வேறு வேறு பாதையில் பயணிக்கிறது. தமிழக காவல்துறையினை முதல்வர் சுதந்திரமாக செயல்பட விட வேண்டும் என அண்ணாமலை தெரிவித்தார்.

ஓபிஎஸ் வீட்டில் அண்ணாமலை:

தொடர்ந்து, மதுரையில் இருந்து தேனி பெரியகுளம் சென்ற பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் வீட்டுக்குச் சென்று அவரது தாய் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து ஆறுதல் கூறினார்.

Tags

Next Story