நிறைவு பெற்றது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு, 17 காளைகளை அடக்கியவருக்கு கார்

நிறைவு பெற்றது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு, 17 காளைகளை அடக்கியவருக்கு கார்
X

கார் பரிசு வென்ற மாடுபிடி வீரர்

மொத்தம் 10 சுற்றுகளாக நடைபெற்ற மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி தற்போது நிறைவடைந்துள்ளது.

பொங்கல் விழாவையொட்டி மதுரை மாவட்டத்தில் புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம்.

தைத்திருநாளான பொங்கல் விழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் மதுரை மாவட்டத்தில் மட்டும் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய 3 இடங்களில் உலக புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும். இந்த ஆண்டு, தைத்திருநாளான இன்று (ஜன. 15) அவனியாபுரத்திலும், நாளை (ஜன.16), பாலமேட்டிலும் நாளை மறுநாள் (ஜன. 17) அலங்காநல்லூரிலும் நடைபெற இருக்கிறது. இதனால் மதுரையே விழாக்கோலம் பூண்டிருக்கிறது.

அந்த வகையில் பொங்கல் பண்டிகை நாளான இன்று அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

காலை 7 மணிக்கு தொடங்கிய போட்டியில் மொத்தம் 825 காளைகள் களம்கண்ட நிலையில் 300க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர். மொத்தம் 10 சுற்றுகளாக நடைபெற்ற மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி தற்போது நிறைவடைந்துள்ளது.

17 காளைகளை அடக்கி கார்த்தி என்ற வீரர் முதலிடம் பிடித்தார். அவருக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் சார்பில் ஒரு கார் பரிசாக வழங்கப்பட்டது. அதே போல அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் வீரர்களை தெறிக்கவிட்டு முதலிடத்தை பிடித்த ஜி.ஆர்.கார்த்திக் என்பவரின் காளைக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் கார் பரிசாக வழங்கப்பட்டது.

இந்த போட்டியில் 13 காளைகளை அடக்கி ரஞ்சித் குமார் என்பவர் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். 9 காளைகளை அடக்கிய முரளிதரன் மூன்றாவது இடம் பிடித்துள்ளார்.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் ஜீர் காளை சிறந்த காளையாக தேர்வு செய்யப்பட்டு பரிசுக் கோப்பை மற்றும் கார் பரிசாக கொடுக்கப்பட்டது.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை நேரில் கண்டு களிக்க குடும்பத்துடன் வந்த அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இறுதி கட்டத்தில் மாடு பிடிக்கும் அனைத்து வீரர்களுக்கும் தங்க காசு வழங்கினார்.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் தலைமை காவலர், சார்பு ஆய்வாளர் உட்பட 48 பேர் காயமடைந்துள்ளனர். மாடுபிடி வீரர்கள் 19 பேர், காளை உரிமையாளர்கள் 25 பேர், பார்வையாளர்கள் 2 பேர், காவலர்கள் 2 பேர் என மொத்தம் 48 பேர் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Tags

Next Story