ரயில் நிலையங்களில் இனி போட்டோ ஷூட் நடத்த கட்டணம் அடிப்படையில் அனுமதி

திருமண நிகழ்ச்சிகளில் எடுக்கப்படும் போட்டோ மற்றும் வீடியோவை தொடர்ந்து, கடந்த சில ஆண்டுகளாக வெளி இடங்களில் புதுமண தம்பதிகள் போட்டோ ஷூட் நடத்தி அதை ஆல்பமாக தயார் செய்து வருவது அதிகரித்து வருகிறது. சிலர் இயற்கை எழில் கொஞ்சும் பகுதிகளிலும், சிலர் மலை உச்சிகளிலும் போட்டோ ஷூட் நடத்துவது வழக்கம். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கழிவுநீர் ஓடையில் போட்டோ ஷூட் நடத்தி ஒரு புதுமண தம்பதி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினர்.
இந்த நிலையில், தற்போது, ரயில் நிலையங்களில் புதுமண தம்பதிகள் போட்டோ ஷூட் நடத்திக் கொள்ள தெற்கு ரயில்வே அனுமதி வழங்கி உள்ளது. உள்ளூர் தயாரிப்புகளை ஊக்குவிக்க ரயில் நிலையங்களில் இலவசமாக விற்பனை செய்ய "ஒரு நிலையம் ஒரு பொருள்" திட்டம், ரயில் பெட்டிகளில் விளம்பரம் செய்வது, ரயில் நிலையத்திற்கு வந்து செல்லும் வாகனங்களுக்கு கட்டண நிர்ணயம் உள்ளிட்ட பல்வேறு விதத்தில் வருமானத்தை ஈட்டி வருகிறது.
குறிப்பாக ரயில் நிலையங்களில் சினிமா திரைப்படங்களுக்கான காட்சிகள் எடுப்பதற்கு பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்பட்டு ரயில் நிலையங்களில் திரைப்படங்கள் எடுக்க அனுமதிக்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக, தற்போது இளைஞர்கள் மத்தியில் பிரபலமாக அறியப்பட்டு வரும் வெட்டிங் சூட்(wedding shoot) அல்லது விளம்பரதாரர்கள் புகைப்படங்கள் எடுப்பதற்கு அனுமதி வழங்கி அதற்கான கட்டண நிர்ணயம் தெற்கு ரயில்வே சார்பில் கடந்தாண்டு வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, மதுரை ரயில் நிலையத்தில் புதுமணத் தம்பதியர் ரூபாய் 5000 கட்டணம் செலுத்தி பல புகைப்படங்கள் எடுத்துக் கொள்ளலாம் எனவும், ரயில் பெட்டி பின்புலம் வேண்டுமென்றால் கூடுதல் கட்டணம் ரூபாய் 1500 செலுத்தவேண்டும். மற்ற ரயில் நிலையங்களுக்கான கட்டணம் ரூபாய் 3000 (ரயில் பெட்டிக்கு கூடுதலாக ரூபாய் 1000) என மதுரை கோட்ட ரயில்வே நிர்வாகம் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu