கைதிகள் படிக்க 1000 புத்தகங்களை அன்பளிப்பாக வழங்கிய நடிகர் விஜய் சேதுபதி!
மதுரை மத்திய சிறை டிஐஜி பழனியிடம் புத்தகத்தை நடிகர் விஜய் சேதுபதி வழங்கினார்.
தமிழகத்தில் உள்ள சிறைகளில் இருக்கும் கைதிகளும் புத்தகங்களை வாசிக்க வேண்டும் என்ற அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தமிழக சிறைத்துறை சிறைவாசிகளின் நலன் சிறை காவலர் நலன் ஆகியவற்றில் தனி கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில் சிறைகளில் கைதிகளுக்கான நவீன நேர்காணல் அறை, பொதுமக்களுடன் பங்களிப்புடன் கூடிய நூலகம் உள்ளிட்ட பல்வேறு சீர்திருத்தங்களை கொண்டு வந்துள்ளது.
இதன் ஒரு பகுதியாக சிறை கைதிகளின் வாசிப்புத் திறனை மேம்படுத்தும் விதமாக, தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் ‘சிறை நூலகத் திட்டம்’ ஒன்றை சிறைத் துறை நிர்வாகம் கொண்டு வந்துள்ளது. அதன்படி, மதுரை மத்திய சிறையில் கைதிகளுக்கான பெரிய அளவிலான நூலகம் அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
இந்த நூலகத்திற்கு சுமார் ஒரு லட்சம் புத்தகங்களை தனிநபர், அமைப்புகள் மூலம் நன்கொடையாக பெறுவது என, இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இலக்கியம், கவிதை, நாவல், புராணம் போன்ற பல்வேறு புத்தகங்களை நன்கொடையாக பெறப்பட்டு வருகிறது. இதுவரை சுமார் 12 ஆயிரத்திற்கும் மேலான புத்தகங்கள் சேகரிக்கப் பட்டுள்ளன.
இந்த நிலையில், மதுரை உசிலம்பட்டியில் திரைப்பட ஷூட்டிங்க்கிற்கான வந்திருந்த திரைப்பட நடிகர் விஜய் சேதுபதி இந்தத் திட்டம் குறித்து அறிந்து ஆயிரம் புத்தகங்களை அன்பளிப்பாக அளிக்க முடிவு செய்தார். இதைத்தொடர்ந்து, மதுரை மத்திய சிறைக்கு இன்று சென்ற நடிகர் விஜய் சேதுபதி சிறைத்துறையின் துணைத் தலைவர் பழனியிடம் நூலகத் திட்டம் எப்படி செயல்படுகிறது என்பது குறித்து கேட்டறிந்தார்.
பின்னர் கைதிகள் படிக்கும் வகையில் 1000 புத்தகங்களை அவர் அன்பளிப்பாக சிறைத்துறை டிஐஜி பழனியிடம் வழங்கினார். புத்தகம் வழங்கிய நடிகர் விஜய் சேதுபதிக்கு சிறைத்துறையினர் மட்டுமின்றி பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து உள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu