31 கொரோனா பெட்டிகள் தயார்
மதுரை மாவட்டத்தில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவுகிறது. இதன் காரணமாக தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். அவர்களுக்கு அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் மதுரை மாவட்ட அரசு, தனியார் ஆஸ்பத்திரிகளில் படுக்கை வசதிகள் அனைத்தும் கிட்டத்தட்ட நிரம்பி விட்டன. அதே நேரத்தில் கொரோனா நோய் தொற்று பாதிப்பு எண்ணிக்கை தினமும் ஆயிரத்தையும் தாண்டி சென்று கொண்டு உள்ளது.
தமிழகத்தில் கடந்த ஆண்டு கொரோனா பரவல் தொடங்கியபோது வெண்டிலேட்டர், ஆக்சிஜன் சிலிண்டர் உள்ளிட்ட பல்வேறு நவீன அம்சங்களுடன் கொரோனா ரெயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டன.
ஒரு ஜன்னல் மூடப்பட்டு, மற்றொரு ஜன்னல் திறக்கப்பட்டு உள்ளது. இவற்றில் மருத்துவ உபகரணங்கள் பொருத்த வசதியாக, 220 வோல்ட் மின்சார பிளக்பாயின்ட்கள் உள்ளன. ஒரு பெட்டிக்கு 4 கழிவறைகள், 2 குளியல் அறைகள் உள்ளன.
இது தவிர மருத்துவ ஆலோசனை அறை, மருந்து வைப்பறை, கேன்டீன் ஆகியவை இருக்கும் வகையில் கொரோனா ரெயில் பெட்டிகள் வடிவமைக்கப்பட்டு உள்ளன.
மதுரை மாவட்டத்தில் கொரோனாவை எதிர் கொள்ளும் வகையில் நவீன வசதிகளுடன் கூடிய 31 ரெயில் பெட்டிகள் கடந்த ஆண்டு தயாரிக்கப்பட்டன. இவற்றில் நோயாளிகளுக்கு கடந்த ஆண்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
அதன் பிறகு இந்த ரெயில் பெட்டிகள், சமயநல்லூரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. தற்போது மதுரை மாவட்டத்தில் கொரோனா பரவல் உச்சம் பெற்று உள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவற்றை மீண்டும் மதுரை ரெயில் நிலையத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.
இதுதொடர்பாக மதுரை மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரி கூறும்போது, மதுரை மாவட்டத்தில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை ஒரு பக்கம் உயர்ந்தாலும், நோய் தொற்று குணமாகி வீடு திரும்புவோரின் எண்ணிக்கை கணிசமான அளவில் உயர்ந்து வருகிறது.
இதுதவிர வீட்டில் இருந்தபடி சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. மதுரை மாவட்டத்தில் தேவை ஏற்படும் பட்சத்தில் கொரோனா ரெயில் பெட்டிகள் மீண்டும் மருத்துவ சேவையில் பயன்படுத்தப்படும் என்று தெரிவித்து உள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu