மதுரையில் மல்லிகைப்பூ ரூ.3 ஆயிரத்துக்கு விற்பனை
மதுரை மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.3 ஆயிரத்துக்கு விற்பனையானது.
இதுகுறித்து பூ வியாபாரிகள் கூறியதாவது-ஆண்டுதோறும் மார்ச் மாதம் முதல் ஜூன் மாதம் வரை மல்லிகைப்பூ சீசன் இருக்கும். இந்த சமயத்தில் மதுரையை சுற்றியுள்ள அவனியாபுரம், சின்ன உடைப்பு, பெருங்குடி, சத்திரப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள தோட்டங்களில் மல்லிகைப்பூ அதிகளவில் பூக்கும். பனி அதிகமாக கொட்டும் நேரங்களில் பூக்கள் விளைச்சல் இருக்காது. தற்போது பனி அதிகஅளவில் பெய்கிறது. கடும் குளிர் வாட்டி வதைக்கிறது.
இதனால் பெரும்பாலான பூக்கள் உற்பத்தி குறைந்து உள்ளது. அந்த வகையில் மல்லிகைப்பூ உற்பத்தியும் மிக மிக குறைந்துவிட்டது. இந்தநிலையில் முகூர்த்த நாட்களில் மல்லிகைப்பூ உள்ளிட்ட சில வகை பூக்களுக்கு கடும் கிராக்கி நிலவுகிறது. அதன்படி தான் நேற்று பல்வேறு விழாக்களின் காரணமாக மல்லிகைப்பூக்கு கடும் கிராக்கி இருந்தது. ஆனால் விளைச்சல் இல்லாத காரணத்தினால் மார்க்கெட்டுக்கு மல்லிகைப்பூ வரத்து குறைவாக இருந்தது.
இதனால் மல்லிகை ஒரு கிலோ ரூ.3 ஆயிரத்துக்கு விற்பனையானது. இதேபோல கலர் பிச்சிப்பூ ரூ.1,700, மெட்ராஸ் மல்லி ரூ.1,700, கனகாம்பரம் ரூ.2,500, முல்லைப்பூ ரூ.2 ஆயிரம், கோழிக்கொண்டை ரூ.60, செண்டுப்பூ ரூ.25, செவ்வந்தி ரூ.100, சம்பங்கி ரூ.500, பட்டன் ரோஸ் ரூ.250, ரோஜா ரூ.150, அரளி ரூ.250 என விலை போனது. இவ்வாறு அவர் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu