நக்சல்கள் வைத்த கண்ணி வெடியில் இராணுவ வீரர் பலி
இந்திய திபேத் எல்லை பாதுகாப்பு படையில் பணியாற்றும் மதுரை இராணுவ வீரர், கடந்த 24ந் தேதி மாலையில் சத்திஸ்கர் மாநிலத்தில் நக்ஸல்கள் பதுக்கி வைத்திருந்த கண்ணி வெடிகளில் சிக்கி எதிர்பாராவிதமாக உயிரிழந்தார்.
மதுரை கிழக்கு தாலுகாவில் உள்ள பொய்கை கரைப்பட்டியினைச் சேர்ந்த பாலச்சாமி இந்திய திபேத் எல்லை பாதுகாப்பு படையில் கடந்த 14 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊர் வந்து கடந்த பிப்ரவரி 3ந் தேதி மீண்டும் பணிக்கு திரும்பியுள்ளார். இந்நிலையில் கடந்த 24ந் தேதி மாலையில் சத்திஸ்கர் மாநிலத்தில் நக்ஸல்கள் பதுக்கி வைத்திருந்த கண்ணி வெடிகளில் சிக்கி எதிர்பாராவிதமாக உயிரிழந்துள்ளார்.
அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது, பின்னர் பெங்களுரில் இருந்து துணை இராணுவ வீரர்கள் அவரது சொந்த ஊரான பொய்கை கரைப்பட்டி கிராமத்திற்கு கொண்டு வந்தனர்.
பின்னர் உறவினர்களிடம் பிரேத உடல் ஒப்படைக்கப்பட்டது. பிரேத உடலை பார்த்தவுடன் உறவினர்கள் கிராம மக்கள் அனைவரும் கதறி அழுதனர். மாவட்ட ஆட்சியர் அன்பழகன் பிரேத உடலுக்கு மலர் அஞ்சலி செய்து விட்டு பால்ச்சாமியின் மனைவி ராமலெட்சுமியிடம் ரூ 20 லட்சத்திற்கான காசோலையை வழங்கி ஆறுதல் கூறினார். அதனைத் தொடர்ந்து பிரேத உடலுக்கு துணை ராணுவத்தினர் கமாண்டர் பானு பிரதாப்சிங், துணை கமாண்டர் ராஜேஸ்மீனா ஆகியோர் தலைமையில் அஞ்சலி செய்தனர். பின்னர் அவரது உடலை துணை இராணுவத்தினர் மற்றும் கிராம பொது மக்கள் மயானத்திற்கு சுமந்தே கொண்டு சென்றனர். அங்கு துணை இராணுவத்தினர் பிரேத உடலை சவப்பெட்டியிலிருந்து மயானத்தில் வைத்தனர்.
அதன் பின்னர் மூவர்ண தேசியக் கொடியினை போர்த்தி, துணை ராணுவத்தினர் 13 பேர் வரிசையில் நின்று 3 தடவை 39 குண்டுகள் வானை நோக்கி சுட்டனர். பிரேத உடலில் போர்த்தப்பட்ட கொடி அவரது தந்தையிடம் கமாண்டர் வழங்கினார். அதன் பின்னர் பிரேத உடல் எரியூட்டப்பட்டது.
இறந்தவருக்கு ராமலட்சுமி என்ற மனைவியும் அவருக்கு நிதிக்ஸா என்ற இரண்டு வயது பெண் குழந்தையும் உள்ளது. இறப்பை முன்னிட்டு பொய்கை கரைப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தது. கிராமங்களே சோகத்தில் மூழ்கின.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu