பேருந்துகள் இயங்காததால் மதுரையில் பொதுமக்கள் அவதி

பேருந்துகள் இயங்காததால் மதுரையில் பொதுமக்கள் அவதி
X

போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் பெரும்பாலான பேருந்துகள் இயங்கவில்லை.

மதுரை மாவட்டத்தில் திருமங்கலம், சோழவந்தான், எல்லீஸ்நகர், பசுமலை, திருப்பரங்குன்றம், மேலூர், புதூர் உள்ளிட்ட 14 பணிமனைகளில் இருந்து 900க்கும் மேற்பட்ட பேருந்துகள் மதுரை நகர், புறநகர் மற்றும் தொலைதூர பேருந்துகளாக இயக்கப்படுகின்றன. இந்நிலையில் போக்குவரத்து தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல கட்ட போராட்டங்கள் நடத்திய நிலையில் 14 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற பேச்சு வார்த்தைக்கு அழைக்க கோரி இன்று முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் மதுரை மாவட்டத்தில் போக்குவரத்து பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. மாவட்டத்தில் 80 சதவீத பேருந்துகள் இயக்கப்படவில்லை. தற்போது வரை 20 சதவீத பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. மதுரை மண்டலத்திற்குள் மட்டுமே பேருந்துகள் இயங்குகின்றன. திருநெல்வேலி, செங்கோட்டை,திருச்சி, கோவை, சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லக்கூடிய தொலைதூர பேருந்துகள் இயங்கவில்லை, இதனால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இதுகுறித்து போக்குவரத்து தொழிலாளர் சிஐடியு மாவட்ட தலைவர் அழகர்சாமி கூறுகையில், தேர்தலுக்கு முன்னதாகவே போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும், பின்னர் நிறைவேற்றப்பட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுவிடும். தற்போது போக்குவரத்து தொழிலாளர்கள் சம்பளம் மட்டுமே கொடுக்கப்பட்டு வருகிறது.

தற்போது விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளால் போக்குவரத்து தொழிலாளர்கள் மிகவும் துன்பப்பட்டு வருகிறார்கள். அனைத்து துறைகளை காட்டிலும் குறைந்த ஊதியத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். எனவே 14 வது ஊதிய உயர்வு தொடர்பான பிரச்சனைகளை பேசி மாநில அரசு உடனடியாக தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil