அதானி, அம்பானிக்காக ஆட்சி நடக்கிறது-வைகோ

அதானிக்காக, அம்பானிக்காக தற்போதைய ஆட்சி நடக்கின்றது என மதுரையில் நடைபெற்ற கம்யூனிஸ்ட் மாநாட்டில் வைகோ பேசினார்.

மதுரையில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு நடைபெற்றது. இதில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜிவாஹிருல்லா கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் காதர் மொய்தீன் உள்பட முக்கிய தலைவர்கள் இதில் கலந்து கொண்டார்கள் இதில் டெல்லியில் நடைபெறும் போராட்டத்தில் இறந்துபோன 200 விவசாயிகளின் மறைவுக்கு இரங்கல் தெரிவிப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

தொடர்ந்து மாநாட்டில் பங்கேற்ற மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேசியதாவது:இங்கே தீர்மானங்களை வாசித்தார்கள். அதில் ஒரேயொரு தீர்மானத்தில் மட்டும், 500 திருத்தங்கள் செய்ததாகச் சொன்னார்கள். அந்த அளவுக்கு, கொள்கைத் தெளிவுமிக்க தோழர்கள், பொதுவுடைமைக் கொள்கைகளில் ஊறித் திளைத்து இருக்கின்றார்கள்; கருத்துரிமைக்கு மதிப்பு அளிக்கின்றார்கள் என்பதைத்தான் நான் எண்ணிப் பார்க்கின்றேன்.

எத்தனையோ அடக்குமுறைகளை எதிர்கொண்டவர்கள் நீங்கள். சிறையில் இருந்தவாறே தோழர் பி.இராமமூர்த்தி, தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கே.டி.கே. தங்கமணி, ஜானகி அம்மையார் போல, கம்யூனிஸ்ட் கட்சிக்காகப் பாடுபட்டவர்கள் ஏராளம். அன்றைக்கு இருந்தது போன்ற அடக்குமுறை, இன்றைக்கு மீண்டும் தலைதூக்கிவிட்டது. எனக்கு முன்பு பேசியவர்கள் எல்லாம் அதைப் பற்றிக் குறிப்பிட்டார்கள்.

இரக்கம் , மனசாட்சி அற்ற ஒரு அரசை நரேந்திர மோடி நடத்திக்கொண்டு இருக்கின்றார். குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்துப் போராடிய 52 பேர் பலியாகி இருக்கின்றார்கள். அதைப் போல, மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து, லட்சக்கணக்கான விவசாயிகள், உறையவைக்கும் குளிரில் வீதிகளில் கிடந்து வாடிக்கொண்டு இருக்கின்றார்களே, அதைப் பற்றிக் கவலைப்பட்டாரா நரேந்திர மோடி? இல்லை. அவர் கார்ப்பரேட் கம்பெனிகளுக்காக ஆட்சி நடத்திக்கொண்டு இருக்கின்றார். அதானிக்காக, அம்பானிக்காக ஆட்சி நடக்கின்றது.

விமான நிலையங்களைத் தனியாரிடம் கொடுக்கின்றார்கள்; ரயில்வேயைக் கொடுக்கின்றார்கள், பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்தையும், தனியாரிடம் விற்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் அவர் செய்து முடித்துவிட்டார். அத்தகைய நரேந்திர மோடிக்கான அடிவருடி அரசியலைத்தான், எடப்பாடி பழனிசாமி செய்து கொண்டு இருக்கின்றார்.இவ்வாறு வைகோ பேசினார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!