சென்னையில் மாடு முட்டி பள்ளிக் குழந்தை படுகாயம்: அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்

சென்னையில் மாடு முட்டி பள்ளிக் குழந்தை படுகாயம்: அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்
X
கால்நடைகளை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை, அரும்பாக்கம் எம்எம்டிஏ காலனி, இளங்கோ தெருவில் சாலையில் நடந்து சென்ற பள்ளி மாணவியை மாடு முட்டி தூக்கி வீசப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தாயின் கண் முன்னே நடந்த கோர சம்பவத்தின் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாடு முட்டியதில் சிறுமி படுகாயமடைந்ததால் மருத்துவமனையில் சிக்கிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.


இதுகுறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், 2 மாடுகள் பெரம்பூர் டிப்போவில் பிடித்து வைக்கப்பட்டுள்ளன. நகர்ப்புறங்களில் சுற்றி திரியும் மாடுகளை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. தனியார் மருத்துவமனையில் குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாநகரப் பகுதியில் சுற்றும் மாடுகளை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

மாட்டு உரிமையாளர் விவேக் என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், வீட்டில் கட்டிப்போட்டிருந்த மாட்டை யாரோ அவிழ்த்து விட்டுள்ளனர். இதனால் மாட்டை நாய் கடித்துள்ளது. பள்ளிக் குழந்தையும் விளையாட்டாக மாட்டிடம் விளையாண்டுள்ளது, இதனால் தான் மாடு சிறுமியை முட்டியுள்ளது என உரிமையாளர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

மாட்டின் உரிமையாளர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. உயிருக்கு ஆபத்து விளைவிப்பது, அஜாக்கிரதையாக செயல்பட்டது ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


இந்த நிலையில் கால்நடைகளை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை அரும்பாக்கம் சி.எம்.டி.ஏ. பகுதியில் சாலையில் கட்டுப்பாடின்றி திரிந்த பசு மாடு, அவ்வழியே சென்ற பள்ளிக் குழந்தையை முட்டித் தூக்கி வீசியதில் அந்தக் குழந்தை படுகாயமடைந்து மருத்துவமனையில் மருத்துவம் பெற்று வருகிறாள். பள்ளி சென்று திரும்பிய குழந்தை வீட்டுக்கு செல்வதற்கு பதிலாக மருத்துவமனைக்கு சென்றிருப்பது வேதனையளிக்கிறது. காயமடைந்த குழந்தை விரைவில் முழு நலம் பெற்று வீடு திரும்ப எனது விருப்பங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பள்ளிக்குழந்தை முட்டித் தூக்கி வீசப்பட்டது மட்டுமின்றி, சாலை விபத்துகளுக்கும் கால்நடைகள் காரணமாக உள்ளன. சென்னையிலும், புறநகர் பகுதிகளிலும், அதிக போக்குவரத்து நிகழும் கிழக்குக் கடற்கரைச் சாலை மற்றும் பழைய மகாபலிபுரம் சாலையிலும் கால்நடைகள் திடீரென சாலைகளுக்குள் நுழைவதால் அதிக விபத்துகள் நடக்கின்றன; அதனால் ஏராளமான உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. இவை தடுக்கப்பட வேண்டும்.

சென்னை மாநகர எல்லைக்குள் கால்நடைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. கால்நடைகளைக் கட்டுப்படுத்த எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படாதது தான் இதற்கு காரணம். சென்னை மாநகரில் கால்நடை வளர்ப்பை சட்டத்தின் வழியாக மட்டுமே பார்க்க முடியாது. கால்நடைகள் சென்னையின் பூர்வகுடி மக்களின் வாழ்வாதாரம் சார்ந்தவை என்பதால், அந்தக் கோணத்திலும் தான் பார்க்க வேண்டியுள்ளது. அதேநேரத்தில் கால்நடைகளால் மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுவதை அனுமதிக்க முடியாது.

பொதுமக்களின் குறிப்பாக குழந்தைகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு சென்னையில் கால்நடைகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த சென்னை மாநகராட்சியும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட குழந்தைக்கு தரமான மருத்துவம் அளிக்கப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
சத்தியமங்கலத்தில் விசிக ஆர்ப்பாட்டம்...! அமித்ஷாவுக்கு எதிராக கோஷங்கள்..!