/* */

மலைப் பிரதேசங்களில் வீடு கட்ட அனுமதி மறுப்பதா? உயர் நீதிமன்றம் கேள்வி

மலைப் பிரதேசங்களில் வீடு கட்ட அனுமதி மறுப்பது அடிப்படை உரிமையை பறிக்கும் செயல் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

மலைப் பிரதேசங்களில் வீடு கட்ட அனுமதி மறுப்பதா? உயர் நீதிமன்றம் கேள்வி
X

சென்னை உயர் நீதிமன்றம். (கோப்பு படம்).

நீலகிரி மாவட்டம், ஊட்டி சேகுர் சாலையில் உள்ள நிலத்தில் வீடு கட்ட அனுமதி வழங்க மறுத்த நகராட்சி ஆணையரின் உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் நாகராஜ் என்பவர் வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் சரத் சந்திரன் ஆஜராகினார். அவர் வாதிடும்போது, மனுதாரர் நிலம் காப்புக்காட்டில் இருந்து 150 மீட்டர் தூரத்தில் உள்ளதால், அங்கு வீடு கட்ட தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் (மலை நிலையங்கள்) கட்டிட விதிகள் 7 (2)- இன்படி அனுமதிக்க முடியாது என்று ஆணையர் உத்தரவிட்டு உள்ளார், மனுதாரர் நிலம், முதன்மை குடியிருப்பு மண்டலம் என்று அறிவித்த பிறகு, அனுமதி மறுத்த ஆணையரின் உத்தரவு சட்டவிரோதம்’’ என்று வாதிட்டார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சதீஷ்குமார் பிறப்பித்த உத்தரவு விவரம் வருமாறு:

மாவட்ட நகராட்சிகள் (மலை நிலங்கள்) கட்டிட விதிகள் 7(2)-யை, அதிகாரிகள் தவறாக புரிந்துக் கொண்டு, மனுதாரருக்கு வீடு கட்ட அனுமதி மறுக்கப்பட்டுள்ளதா? என்பது உள்பட பல கேள்விகளை இந்த நீதிமன்றம் எழுப்பியது. இந்த சட்ட ரீதியான கேள்விகளுக்கு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சீனிவாஸ் பதில் அளிக்காமல், ஏற்கெனவே, இந்த நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது என்று கூறி, அந்த தீர்ப்பை தாக்கல் செய்து விட்டு, நீதிமன்ற அறையை விட்டு வெளியேறி விட்டார். அவரது செயல் வழக்கறிஞர் தொழில் தர்மத்துக்கு எதிரானது. சட்ட ரீதியாக இந்த நீதிமன்றம் கேட்கும் கேள்விக்கு, பதில் அளிப்பது அவரது கடமை ஆகும்.

தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டத்தின் கீழ், மலை நிலங்களில் வீடு கட்டுவது தொடர்பான விதிகள் 1993 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. ஆனால், நகர மற்றும் ஊரமைப்புத்துறையினரால், வீட்டு மனையாக அங்கீகரிக்கப்பட்ட நிலத்தில் வீடு கட்ட இந்த சட்டம் மற்றும் விதிகள் தடையாக இல்லை.

மேலும், உச்ச நீதிமன்றம் ஒரு வழக்கில் பிறப்பித்த தீர்ப்பு மற்றும் தமிழ்நாடு அரசு வேறு ஒரு வழக்கில் எடுத்துள்ள நிலை ஆகியவற்றை இந்த நீதிமன்ற கவனத்துக்கு கொண்டு வரவில்லை. வனப்பகுதியில் வீடு கட்ட ஒட்டு மொத்தமாக தடை உள்ளது என்று எடுத்துக் கொண்டால், அது மலை பிரதேசங்களில் தனி நபர் சொத்து வைத்திருக்கும் உரிமையையே அப்படியே எடுத்து விடுவதாகி விடும்.

ஒவ்வொரு மலை பிரதேசங்களிலும் தனியாருக்கும் நிலம் இருக்கும். அரசியல் அமைப்புச் சட்டத்தின் படி ஒவ்வொரு குடிமகனுக்கும் வீடு கட்டி கண்ணியத்துடன் வாழ உரிமை உள்ளது. எனவே, வீடு கட்ட அனுமதி மறுக்கப்பட்டால், அரசியல் அமைப்புச் சாசனம் வழங்கியுள்ள உரிமையையே பறிப்பதாகி விடும்.

இதேபோல வேறு ஒரு வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி, கடந்த 2020 ஆம் ஆண்டு ஊட்டியில் வீடு கட்ட அனுமதி வழங்கி தீர்ப்பு அளித்துள்ளார். அந்த வழக்கில் நகராட்சி ஆணையரும் எதிர்மனுதாரராக இருந்துள்ளார். தீர்ப்பை அவர் அமல்படுத்தியும் உள்ளார். அப்படியிருந்தும் வீடு கட்ட அனுமதி கேட்டு கொடுக்கப்படும் மனுவை, விதி 7(2) -இன் கீழ் அனுமதி வழங்க மறுத்து, மனுவை நகராட்சி ஆணையர் நிராகரித்து உள்ளார்.

அவரது இந்த செயல், பொதுமக்களின் அடிப்படை உரிமையை பறிப்பதாக உள்ளது. எனவே, நகராட்சி ஆணையர் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மனுதாரர் வீடு கட்ட ஆணையர் அனுமதி வழங்க வேண்டும். எதிர்காலத்தில் இதுபோல வீடு கட்ட வேறு யாரவது அனுமதி கேட்டு விண்ணப்பம் கொடுத்தால், சட்டத்துக்கு உட்பட்டு அதற்கு அனுமதி வழங்க வேண்டும். பிரிவு 7(2) -ஐ காரணம் காட்டி நிராகரிக்கக் கூடாது என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Updated On: 19 March 2023 12:47 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கோடையின் மகிழ்ச்சியைப் பறைசாற்றும் தமிழ்க் கவிதைகள்!
  2. லைஃப்ஸ்டைல்
    காதல் கொஞ்சம்..! கவலை கொஞ்சம்..!
  3. ஆன்மீகம்
    சிவபெருமானின் அருள்பெறும் பொன்மொழிகள்..!
  4. லைஃப்ஸ்டைல்
    பணத்தை சிக்கனமாக சேமிக்கும் யுக்திகள்!
  5. லைஃப்ஸ்டைல்
    போலிகளை கண்டு ஏமாறாதீர்கள்..! விழிப்புடன் இருங்க..!
  6. லைஃப்ஸ்டைல்
    உந்துதல் ஊற்றாகும் தமிழ் பழமொழிகள்!
  7. பொன்னேரி
    பெருமாள் - சிவன் நேருக்கு நேர் சந்திக்கும் ஹரிஹரன் சந்திப்பு விழா
  8. லைஃப்ஸ்டைல்
    பட்ஜெட் போடுங்க... பணத்தை சேமிங்க!
  9. சோழவந்தான்
    சோழவந்தான் விசாக நட்சத்திர ஆலயத்தில், மே.1-ம் தேதி குருப்பெயர்ச்சி:...
  10. லைஃப்ஸ்டைல்
    நிமிர்ந்து நில்..! மலைகூட மடுவாகும்..!