அரசு நிலங்களின் குத்தகைகளை மறு ஆய்வு செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

அரசு நிலங்களின் குத்தகைகளை மறு ஆய்வு செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை உயர் நீதிமன்றம். (கோப்பு படம்).

அரசு நிலங்கள் குத்தகைகளை மறு ஆய்வு செய்து அரசு இணையதளங்களில் பதிவேற்றம் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குத்தகைக்கு விடப்பட்ட அரசு நிலங்களின் மதிப்பை மறு ஆய்வு செய்து இணையதளத்தில் பதிவிட சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

மதுரை வடக்கு கிராமத்தில் அரசுக்கு சொந்தமான 5.90 ஏக்கர் நிலத்தை பாண்டியன் ஹோட்டல் நிறுவனத்துக்கு 1968 ஆம் ஆண்டு ஒதுக்கியது. 25 ஆண்டுகளுக்கு வழங்கப்பட்ட இந்த நிலத்துக்கான குத்தகை காலம் 2008 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது. இதையடுத்து, நிலத்தின் சந்தை மதிப்பின் அடிப்படையில் வாடகையை நிர்ணயித்த அரசு, 36 கோடியே 58 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் வாடகையை செலுத்தாவிட்டால், நிலம் ஒதுக்கீடு ரத்து செய்யப்படும் என 2015 ஆம் ஆண்டு மதுரை வடக்கு தாலுகா தாசில்தார் உத்தரவு பிறப்பித்தார்.

இதை எதிர்த்து பாண்டியன் ஹோட்டல் நிறுவனம், 2015 ஆம் ஆண்டு தாக்கல் செய்த வழக்கை விசாரித்த நீதிபதி சுப்பிரமணியம், குத்தகை காலம் முடிந்த பின், அரசு நிர்ணயித்த வாடகையை செலுத்தாமல், 300 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு நிலத்தில், 14 ஆண்டுகள் அனுமதியின்றி ஹோட்டல் நடத்தி அதிக லாபம் அடைந்துள்ளதாக கூறி, பாண்டியன் ஹோட்டல் நிறுவனத்தின் கோரிக்கையை நிராகரித்து உத்தரவிட்டார்.

நிதி நெருக்கடி உள்ளதாக அரசு கூறும் நிலையில், அரசு நிலங்கள் குத்தகைகளை மறு ஆய்வு செய்ய வேண்டியது அரசின் கடமை எனத் தெரிவித்த நீதிபதி, ஒரு மாதத்தில் பாண்டியன் ஹோட்டலை அப்புறப்படுத்தி, அரசு நிலத்தை மீட்க வேண்டும் எனவும், வாடகை பாக்கியை கணக்கிட்டு உடனடியாக வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.

மேலும், வருவாய் நலனை பாதுகாக்கும் வகையில் மாநிலம் முழுவதும் உள்ள அரசு சொத்துக்கள் குத்தகைகளை மறு ஆய்வு செய்யவும், அரசு நிலங்கள் குத்தகை விவரங்களை மாநில, மாவட்ட அளவில் ஒரு மாதத்தில் அரசு இணையதளங்களில் பதிவேற்றம் செய்ய வேண்டும் எனவும் தமிழக வருவாய் துறை செயலாளருக்கும், நில நிர்வாக ஆணையருக்கும் நீதிபதி சுப்பிரமணியம் உத்தரவிட்டு உள்ளார்.

Tags

Next Story