அமைச்சர் தங்கம் தென்னரசுவிற்கு சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

அமைச்சர் தங்கம் தென்னரசுவிற்கு சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
X

சென்னை உயர் நீதிமன்றம். (கோப்பு படம்).

சொத்துகுவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட அமைச்சர் தங்கம் தென்னரசுவிற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சியில் அமைச்சர் தங்கம் தென்னரசு 2006 ஆம் ஆண்டு மே 15 ஆம் தேதி முதல் 2010 ஆம் ஆண்டு மார்ச் 31 வரையிலான காலத்தில் 76 லட்சத்து 40 ஆயிரத்து 443 ரூபாய் சொத்து குவித்ததாக கடந்த 2012 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 தேதி தங்கம் தென்னரசு, அவரது மனைவி மணிமேகலை ஆகியோர் மீது விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறை வழக்கு பதிவு செய்தது.

இந்த வழக்கு விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என தங்கம் தென்னரசு தாக்கல் செய்த மனுவை விசாரித்த முதன்மை அமர்வு நீதிமன்றம் சொத்து குவிப்பு வழக்கில் இருந்து தங்கம் தென்னரசு மற்றும் அவரின் மனைவி மணிமேகலை ஆகியோரை விடுவித்து உத்தரவிட்டது.

வழக்கில் இருந்து தங்கம் தென்னரசு உள்ளிட்டோரை விடுவித்த ஸ்ரீவில்லிபுத்தூர் முதன்மை அமர்வு நீதிமன்ற உத்தரவை மறுஆய்வு செய்யும் வகையில், சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது. இந்த வழக்கு தொடர்பாக பதில் அளிக்க தங்கம் தென்னரசு மற்றும் அவரின் மனைவிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தாமாக முன்வந்து எடுத்த வழக்கு நீதிபதி ஜெயசந்திரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மேல்முறையீடு தொடர்பாக விபரங்கள் அனைத்து தரப்பினருக்கும் கிடைத்துள்ளது என தெரிவிக்கபட்டது. இது போன்ற வழக்குகளை விசாரிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்து உள்ளதாக தெரிவித்த நீதிபதி ஜெயச்சந்திரன், வழக்கின் வாதங்களை தொடங்க அமைச்சர் தங்கம் தென்னரசு தரப்பிற்கு உத்தரவிட்டு விசாரணையை நவம்பர் 28 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!