இசையமைப்பாளர் ஜீ.வி. பிரகாஷ் வழக்கில் வருமானவரித் துறை பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவு
சென்னை உயர் நீதிமன்றம். (கோப்பு படம்).
தமிழ் திரையுலகில் வெயில் படத்தில் அறிமுகமாகி தலைவா, மதராசபட்டினம், அசுரன் உள்ளிட்ட பல்வேறு படங்களில் ஹிட் பாடல்களை கொடுத்து சிறந்த இசையமைப்பாளராக திகழ்பவர் ஜீ.வி. பிரகாஷ் குமார். இவர், பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் சகோதரி மகன் ஆவார். இசையமைப்பாளர் ஜீ.வி. பிரகாஷ் கதாநாயகனாக அறிமுகமாகி தற்போது ஏராளமான படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், இசை படைப்புகளுக்கு ஒரு கோடியே 84 லட்சம் ரூபாய் சேவை வரி செலுத்த கூறி ஜிஎஸ்டி இணை ஆணையர், இசையமைப்பாளர் ஜீ.வி .பிரகாஷ்குமாருக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தார். அந்த நோட்டீசை எதிர்த்து ஜீ.வி. பிரகாஷ் குமார் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி, ஜி.எஸ்.டி இணை ஆணையர் அனுப்பிய நோட்டீசுக்கு நான்கு வாரங்களில் பதில் அளிக்கும்படி ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு உத்தரவிட்டு இருந்தார்.
அந்த உத்தரவை எதிர்த்து ஜீ.வி. பிரகாஷ்குமார் மேல் முறையீடு செய்திருந்தார். அதில், இசை படைப்புகளின் காப்புரிமை, பட தயாரிப்பாளர்களுக்கு நிரந்தரமாக வழங்கிய பின், அதன் உரிமையாளர்கள் அவர்கள் தான் என்றும், தன்னிடம் வரி வசூலிப்பது சட்டவிரோதம் எனவும் கூறப்பட்டு இருந்தது.
இந்த மேல் முறையீட்டு வழக்கு நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது சபிக் ஆகியோர் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜீ.வி. பிரகாஷ்குமார் தாக்கல் செய்துள்ள மேல் முறையீடு மனு மீது நான்கு வாரங்களில் வருமான வரித்துறை பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu