ஈரோடு மாவட்ட காவல் அதிகாரிகளுக்கு ரூ. 10 லட்சம் அபராதம் விதித்த மனித உரிமை ஆணைய உத்தரவு ரத்து

ஈரோடு மாவட்ட காவல் அதிகாரிகளுக்கு ரூ. 10 லட்சம் அபராதம் விதித்த மனித உரிமை ஆணைய உத்தரவு ரத்து
X

சென்னை உயர் நீதிமன்றம். (கோப்பு படம்).

மனித உரிமை மீறல் புகாரில் நான்கு காவல்துறை அதிகாரிகளுக்கு 10 லட்ச ரூபாய் அபராதம் விதித்த மனித உரிமை ஆணைய உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம், பெருந்துறை பகுதியைச் சேர்ந்தவர் நந்தகுமார். இவர், அந்தப் பகுதியில் நடந்த மணல் கொள்ளைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும், அவர் உயர் அதிகாரிகளுக்கு பல்வேறு தகவல்களை தெரிவித்து வந்த நிலையில், மணல் கொள்ளையில் ஈடுபட்ட இருவரின் தூண்டுதலின் பேரில் காவல் துறையினர் தன் மீது பொய் வழக்குகள் பதிவு செய்து கைது செய்ததுடன், குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்ததாகவும் கூறி, மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் மனுவை நந்தகுமார் தாக்கல் செய்தார்.

தனக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்காமல் கைது நடவடிக்கையில் ஈடுபட்ட காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் தனது மனிவில் குறிப்பிட்டிருந்தார். இந்த மனுவை விசாரித்த மனித உரிமை ஆணையம், நந்தகுமாருக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்க உத்தரவிட்டது. அந்தத் தொகையில், பெருந்துறை துணை காவல் கண்காணிப்பாளர் ராஜாகுமாரிடம் இருந்து 5 லட்சம் ரூபாயும், ஆய்வாளர்கள் சுகவனம், ராம்பிரபு ஆகியோரிடம் இருந்து தலா 2 லட்சம் ரூபாயும், உதவி ஆய்வாளர் எட்வர்ட் ராஜியிடம் இருந்து ஒரு லட்சம் ரூபாயும் வசூலித்துக் கொள்ளவும் மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டு இருந்தது.

இந்த உத்தரவை எதிர்த்து காவல் துணை கண்காணிப்பாளர் ராஜாகுமார், ஆய்வாளர்கள் சுகவனம், ராம்பிரபு மற்றும் உதவி ஆய்வாளர் எட்வர்ட் ராஜ் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் வேலுமணி மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வு, மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்த நந்தகுமார் மீது பெண்களுக்கு எதிரான குற்றங்கள், பணம் பறிப்பு உள்ளிட்ட பல குற்றச்சாட்டுக்களின் கீழ் நான்கு வழக்குகள் பதியப்பட்டு உள்ளதும், அதில் இரு வழக்குகளில் அவர் கைதும் செய்யப்பட்டு உள்ளார் என்பது ஆவணங்களில் தெரியவந்துள்ளதாகச் சுட்டிக்காட்டி உள்ளது.

அரசுக்கு ஏற்பட இருந்த வருவய் இழப்பை தடுத்ததற்காகவோ, குற்ற வழக்கில் சம்பத்தப்பட்டு இருந்தாலோ, ஒருவரை ஹீரோ என்றோ, வில்லன் என்றோ சொல்ல முடியாது என்றும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர். மேலும், காவல்துறையினர் நோட்டீஸ் அனுப்பாதது நடைமுறை குறைபாடு தானே தவிர, மனித உரிமை மீறல் அல்ல எனவும், இந்த வழக்கில் மனித உரிமை மீறல் நடந்துள்ளதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை எனக் கூறி, மனித உரிமை ஆணையம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து நீதிபதிகள் இருவரும் உத்தரவிட்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!