மதுபான கொள்முதல் விவரங்களை தெரிவிக்க வேண்டும்.. டாஸ்மாக் நிர்வாகத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு…

மதுபான கொள்முதல் விவரங்களை தெரிவிக்க வேண்டும்.. டாஸ்மாக் நிர்வாகத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு…
X

சென்னை உயர் நீதிமன்றம். (கோப்பு படம்).

மதுபான கொள்முதல் விவரங்களை ஜனவரி 6 ஆம் தேதி தெரிவிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் டாஸ்மாக் என அழைக்கப்படும் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் மூலம் மதுபான விற்பனை நடைபெற்று வருகிறது. மாநிலம் முழுவதும் சுமார் 5400 கடைகள் உள்ளன. 43 கிடங்குகள் உள்ளன. தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தில் சுமார் 30 ஆயிரம் பணியாளர்கள் வேலைபார்த்து வருகின்றனர்.

இந்த நிலையில், டாஸ்மாக் நிறுவனத்தில் மதுபான கொள்முதல் விவகாரத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக, டாஸ்மாக் நிறுவனத்தில் மதுபானம் கொள்முதல் மற்றும் கொள்முதல் விலை உள்ளிட்ட விவரஙகளை வழங்க வேண்டும் என வலியுறுத்தி கோவையைச் சேர்ந்த வழக்கறிஞர் லோகநாதன் என்பவர் வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

வழக்கறிஞர் லோகநாதன் தனது மனுவில், டாஸ்மாக்கில் மதுபானம் விற்பனை செய்ததன் மூலம் அரசுக்கு கிடைத்த வருமானம், ஊழியர்களுக்கான சம்பளம், கடை வாடகை உள்ளிட்ட செலவுகள் குறித்தும், மது உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து எவ்வளவு மதுபானங்கள், என்ன விலைக்கு கொள்முதல் செய்யப்படுகின்றன என்பன குறித்த விவரங்களை கேட்டு, தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ், கடந்த 2015 ஆம் ஆண்டு விண்ணப்பித்திருந்தேன்.

மதுபான விற்பனை மூலம் கிடைத்த வருமானம், ஊழியர் சம்பளம் உள்ளிட்ட செலவுகள் குறித்த விவரங்களை வழங்கிய டாஸ்மாக் நிர்வாகம், மூன்றாம் நபரின் வர்த்தகம் சம்பந்தப்பட்ட விவரங்களை வெளியிட முடியாது எனக் கூறி, எந்தெந்த நிறுவனங்களிடம், எவ்வளவு விலைக்கு மதுபானங்கள் கொள்முதல் செய்யப்படுகின்றன என்ற விவரங்களை வழங்க மறுத்து விட்டது என மனுவில் லோகநாதன் தெரிவித்து உள்ளார்.

இதுதொடர்பாக கடந்த 2017 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் லோகநாதன் வழக்கு தொடர்ந்து இருந்தார். அந்த விவரங்களை பொதுவெளியில் வெளியிடக் கூடாது என்பதற்கு காரணங்கள் உள்ளனவா? என்பதை கண்டறிய, மதுபானங்கள் கொள்முதல் செய்வது தொடர்பாக மது உற்பத்தி நிறுவனங்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தங்களின் நகல்களை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், அந்த வழக்கு நீதிபதி அனிதா சுமந்த் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிமன்றம் கேட்டிறிந்த விவரங்கள் டாஸ்மாக் நிறுவனம் சமர்ப்பிக்கவில்லை. இதையடுத்து, ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தாத டாஸ்மாக் நிர்வாகத்துக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த நீதிபதி அனிதா சுமந்த், அத்தொகையை அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு செலுத்த உத்தரவிட்டார்.

மேலும், எந்தெந்த மது உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து, என்ன விலைக்கு மதுபானங்கள் கொள்முதல் செய்யப்படுகின்றன, மதுபான உற்பத்தி நிறுவனங்களுடன் செய்து கொண்ட ஒப்பந்த நகல்களை சீல் வைக்கப்பட்ட கவரில் ஜனவரி 6 ஆம் தேதி சமர்ப்பிக்க வேண்டும் என டாஸ்மாக் நிர்வாகத்துக்கு உத்தரவிட்ட நீதிபதி அனிதா சுமந்த், விசாரணையை மற்றொரு நாளுக்கு தள்ளிவைத்தார்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil