/* */

கோயில்களின் ஆகமங்களை கண்டறிய 50 கேள்விகளுடன் அனுப்பப்பட்ட சுற்றறிக்கைக்கு தடை.. சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..

கோயில்களின் ஆகமங்களை கண்டறிவது தொடர்பாக 50 கேள்விகளுடன் அனுப்பப்பட்ட சுற்றறிக்கைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

HIGHLIGHTS

கோயில்களின் ஆகமங்களை கண்டறிய 50 கேள்விகளுடன் அனுப்பப்பட்ட சுற்றறிக்கைக்கு தடை.. சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..
X

சென்னை உயர் நீதிமன்றம். (கோப்பு படம்).

தமிழகத்தில் உள்ள கோயில்களில் அர்ச்சகர் நியமனம் தொடர்பான வழக்கை விசாரித்து வந்த சென்னை உயர் நீதிமன்றம், ஆகம விதிப்படி அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும் என்பதால், எந்தெந்த கோவில்கள் எந்தெந்த ஆகமங்களை பின்பற்றுகின்றன என்பதை அடையாளம் காண உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி சொக்கலிங்கம் தலைமையில் ஐந்து பேர் கொண்ட குழுவை நியமித்து உத்தரவிட்டது.

அந்தக் குழுவில், குழு தலைவர் ஒப்புதலுடன் இரு உறுப்பினர்களை அரசு நியமிக்கவும் நீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது. இந்தநிலையில், கோயில்களின் ஆகமங்களை அடையாளம் காண, அறநிலையத் துறை உயர்மட்ட ஆலோசனைக் குழு உறுப்பினர் சத்தியவேல் முருகன் தயாரித்த 50 கேள்விகளுக்கு விடையளிக்கும்படி, அனைத்து கோயில்களுக்கும் அறநிலையத் துறை ஆணையர் நவம்பர் 4 ஆம் தேதியிட்ட சுற்றறிக்கை அனுப்பி இருந்தார்.

அறநிலையத் துறை ஆணையரின் சுற்றறிக்கையை ரத்து செய்யக் கோரி ரமேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், கோயில்களின் ஆகமத்தை கண்டறிய உயர் நீதிமன்றம் நியமித்த குழுவின் அதிகாரத்தை பறித்துக் கொள்ளும் வகையில், சம்பந்தமில்லாத கேள்விகளுடன் அந்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளதாகவும், உயர் நீதிமன்ற உத்தரவின்படி இரு பிரதிநிதிகளை நியமிக்காத அரசு, அறநிலையத் துறை உயர்மட்ட ஆலோசனைக்குழு தலைவருக்கு அதிக அதிகாரம் வழங்கி உள்ளதாகவும், இது நீதிமன்ற அவமதிப்பு செயல் என்றும் மனுவில் சுட்டிக்காட்டி இருந்தார்.

மேலும், ஆகமங்கள் பற்றி ஏதும் தெரியாத சத்தியவேல் முருகன், நடைமுறையில் இல்லாத தமிழ் ஆகமம் பற்றி தவறான பரப்புரை மேற்கொண்டு வருவதாகவும், ஆகமங்களை அறியாத அவர் தயாரித்த கேள்விகளுடன் கூடிய சுற்றறிக்கையை ரத்து செய்வதுடன், அவரை உயர் நீதிமன்றம் நியமித்த குழுவில் உறுப்பினராக நியமிக்க தடை விதிக்க வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, உயர் நீதிமன்ற உத்தரவின்படி, ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்படாத நிலையில், குறிப்பிட்ட நபரை நியமிக்க கூடாது என முன்கூட்டியே இந்த வழக்கு தொடரப்பட்டு உள்ளதாகவும், கடந்த நவம்பர் 4 ஆம் தேதி சுற்றறிக்கை வேறு பயன்பாட்டுக்கு அனுப்பப்பட்டு உள்ளதாகவும் தமிழக அரசுத் தரப்பில் நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்கப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், குறிப்பிட்ட அந்த சுற்றறிக்கை ஆகம விவரங்களை கோரும் வகையில் உள்ளதாக கூறி, ஆகமங்களை கண்டறிவது தொடர்பாக 50 கேள்விகள் எழுப்பி அனுப்பப்பட்ட சுற்றறிக்கைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.

மேலும், மனுவுக்கு நான்கு வாரங்களில் பதில் அளிக்கும்படி தமிழக அரசுக்கும், இந்து சமய அறநிலையத் துறைக்கும் உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தனர்.

Updated On: 9 Dec 2022 4:06 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்