தமிழக அரசின் ஆசிரியர்கள் இடமாற்ற உத்தரவுக்கு தடை.. சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு...

தமிழக அரசின் ஆசிரியர்கள் இடமாற்ற உத்தரவுக்கு தடை.. சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு...
X

சென்னை உயர் நீதிமன்றம். (கோப்பு படம்).

அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் உபரி ஆசிரியர்களை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு பிறப்பித்த அரசாணைக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகளில் பணியாற்றும் உபரி ஆசிரியர்களை வேறு பள்ளிகளுக்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. அந்த உத்தரவில், ஆண்டுதோறும் மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் ஆசிரியர்களின் எண்ணிக்கையை ஜூலை மாத இறுதிக்குள் முடிவு செய்ய வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட பள்ளிகளிடம் ஆட்சேபங்களைப் பெற்று, ஆசிரியர்களின் எண்ணிக்கையை இறுதி செய்து, உபரி ஆசிரியர்களை, இடமாற்றம் செய்யும் நடவடிக்கையை அக்டோபர் 15 ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்றும் கால நிர்ணயம் செய்தும் அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.

அந்த நடைமுறையின் அடிப்படையில், இந்த ஆண்டிற்கான உபரி ஆசிரியர்களை இடமாற்றம் செய்வது தொடர்பான உத்தரவை கடந்த ஜனவரி 23 ஆம் தேதி தமிழ்நாடு அரசு பிறப்பித்தது. அந்த உத்தரவில், காஞ்சிபுரத்தை சேர்ந்த மரியா அக்சிலியம் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியைகள் அம்பிகாவேணி, சகாயராணி, மரியம்மா டெய்சி ஆகியோரை எஸ்.எஸ்.கே.வி. அரசு உதவி பெறும் மகளிர் மேல்நிலைப் நிலை பள்ளிக்கு இடமாற்றம் செய்து உத்தரவிடப்பட்டு இருந்தது.

அந்த உத்தரவை எதிர்த்து மரியா அக்சீலியம் பள்ளி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதேபோல தங்கள் பள்ளி ஆசிரியைகள் ஜெசிந்தா, அஸ்வினி, பாத்திமா ஜெயமேரி, ஏஞ்சல் சகாய ரீகா ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டதை எதிர்த்து டாக்டர் கே.கே.நிர்மலா மகளிர் மேல்நிலைப் பள்ளி தரப்பிலும் வழக்கு தொடரப்பட்டது.

அந்த மனுக்களில், ஒரு குழுமம் நடத்தும் பள்ளியில் உள்ள உபரி ஆசிரியர்களை அதே குழுமத்தில் உள்ள மற்றொரு பள்ளிக்கு தான் அனுப்ப வேண்டும் என்றும், வேறு இடமாற்றம் செய்ய முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், உயர் நீதிமன்றம் தெரிவித்த கால அவகாசத்தை பின்பற்றாமலும், மனுதாரர் பள்ளி ஆட்சேபம் தெரிவிக்க அவகாசம் வழங்காமலும், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாகவும் மனுவில் குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

கல்வியாண்டு முடியும் நிலையில், ஆசிரியர்களை இடமாற்றம் செய்தால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் என்பதால், தமிழ்நாடு அரசு பிறப்பித்த உத்தரவிற்கு தடை விதிக்கவும், அதை ரத்து செய்யவும் பள்ளிகள் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவில் கோரிக்கையாக வைக்கப்பட்டிருந்து.

இந்த வழக்குகள் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் பள்ளிகள் தரப்பு வாதங்களை ஏற்று, பள்ளிகளை ஆட்சேபங்களை கேட்காமல் உபரி ஆசிரியர்களை இடமாற்றம் செய்த தமிழக அரசின் உத்தரவிற்கு தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!