முதுநிலை மருத்துவர்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

முதுநிலை மருத்துவர்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
X

சென்னை உயர் நீதிமன்றம். (கோப்பு படம்).

முதுநிலை படிப்பு முடித்த மருத்துவர்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

தமிழ்நாட்டில் மருத்துவ மேற்படிப்பு முடித்தவர்கள், இரண்டாண்டு அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற வேண்டும் என்ற நிபந்தனை அமலில் உள்ளது. அதன் அடிப்படையில் தங்களுக்கு ஆரம்ப சுகாதார நிலையங்களில் வழங்கப்பட்ட பணி நியமனத்தை எதிர்த்து ஸ்ரீஹரி விக்னேஷ், ஸ்ருதி உள்ளிட்ட 19 முதுநிலை மருத்துவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

அந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்கள் தரப்பில், தாங்கள் பெற்ற நிபுணத்துவத்திற்கு ஏற்ப மாவட்ட தலைமை மருத்துவமனைகளில்தான் நியமிக்க வேண்டும் எனவும், அடிப்படை வசதி இல்லாத ஆரம்ப சுகாதார மையங்களில் நியமிக்கக் கூடாது என்றும் வாதிடப்பட்டது.

தமிழ்நாடு அரசு தரப்பில், 19 மனுதாரர்களில் 8 பேர் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், மீதமுள்ளவர்கள் கூடுதல் ஆரம்ப சுகாதார மையங்களில் பணியமர்த்தப்பட்டு இருப்பதாகவும், கலந்தாய்வில் இந்த இடங்களை அவர்கள்தான் தேர்ந்தெடுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்த உத்தரவில், மேற்படிப்பு படிக்கும் மருத்துவர்களுக்காக மாநில அரசு அதிக செலவு செய்வதாகவும், அதற்கு பிரதிபலனாக சமுதாயத்திற்கு இந்த மருத்துவர்கள் சேவையாற்ற வேண்டுமென வலியுறுத்தி உள்ளார்.

மேலும், இந்த சேவையை இலவசமாக செய்யப்போவதில்லை என்றும், ஊதியத்தை பெற்றுக் கொண்டுதான் செய்யப்போவதாகவும் சுட்டிக்காட்டி உள்ள நீதிபதி, ஏழை மக்களுக்காக ஆரம்ப சுகாதார நிலையங்களை மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுத்துவரும் சூழலில், தங்கள் படிப்பிற்கு இணையான வசதிகள் இல்லை எனக் கூறி ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்ற முடியாது என மருத்துவர்கள் மறுக்க முடியாது என்றும் உத்தரவில் குறிப்பிட்டு உள்ளார்.

கிராமப்புற பகுதிகளில் உள்ள ஏழை மக்களும் சிறப்பு நிபுணத்துவ சிகிச்சை பெற வேண்டும் என குறிப்பிட்டுள்ள நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், மருத்துவர்களை நோயாளிகள் கடவுளுக்கு நிகராக மதிக்கக் கூடிய சூழலில், அந்த கடவுள்கள் தங்கள் நேரத்தை வழக்குகளில் செலவழிக்க வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும், நியமன உத்தரவில் தலையிட எந்தவித காரணமும் இல்லை எனக் கூறி, மனுக்களை தள்ளுபடி செய்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், பிப்ரவரி 10 ஆம் தேதிக்குள் ஒதுக்கப்பட்ட இடங்களில் முதுநிலை மருத்துவர்கள் பணியில் சேர வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!