சிபிசிஐடி விசாரணையில் அதிருப்தி.. உயர் நீதிமன்ற நீதிபதி எச்சரிக்கை...

சிபிசிஐடி விசாரணையில் அதிருப்தி.. உயர் நீதிமன்ற நீதிபதி எச்சரிக்கை...
X

சென்னை உயர் நீதிமன்றம். (கோப்பு படம்).

நெடுஞ்சாலைக்கு நிலம் கையகப்படுத்தியது தொடர்பான வழக்கில், சிபிசிஐடி விசாரணை குறித்து சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை திட்டத்திற்காக காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள கிராமங்களில் நிலம் கையகப்படுத்தப்பட்டன. இந்த நிலங்களுக்கு ஆவணங்களை சமர்ப்பித்தவர்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டது.

ஆனால், பலர் போலியான ஆவணங்களை தாக்கல் செய்து 20 கோடியே 52 லட்சம் ரூபாய் இழப்பீடு பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில், போலியான ஆவணங்களுக்கு இழ்பீடு வழங்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் இரு வழக்குகளை பதிவு செய்து, 15 பேரை கைது செய்துள்ளனர். மேலும், தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி சுரேஷ்குமார் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, சிபிசிஐடி காஞ்சிபுரம் சரக டிஎஸ்பி வேல்முருகன் நீதிமன்றத்தில் ஒரு அறிக்கை தாக்கல் செய்தார். அந்த அறிக்கையை படித்துப் பார்த்த நீதிபதி சுரேஷ்குமார், ஏற்கெனவே தாக்கல் செய்த அறிக்கையையே மீண்டும் தாக்கல் செய்துள்ளதாகவும், விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை என்றும் அதிருப்தி தெரிவித்தார்.

மேலும், இந்த விவகாரத்தில் காஞ்சிபுரம் மாவட்ட அப்போதைய வருவாய் அதிகாரி நர்மதா, இந்த வழக்கு விசாரணைக்கு மூன்று முறை ஆஜராகி உள்ள நிலையில், அவர் எங்கிருக்கிறார் எனத் தெரியவில்லை என்று கூறியுள்ளதன் மூலம், சிபிசிஐடி அதிகாரிகள் எவ்வளவு மந்தமான முறையில் செயல்படுகிறார்கள் என்பது தெளிவாகிறது என நீதிபதி சுரேஷ்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நத்தை வேகத்தில் செயல்பட்டால் வழக்கின் விசாரணையை சிபிஐ-க்கு மாற்ற நீதிமன்றம் தயங்காது என எச்சரித்த நீதிபதி சுரேஷ்குமார், சரியான திசையில் திறமையாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய சிபிசிஐடிக்கு இறுதி வாய்ப்பாக ஒருவார காலம் அவகாசம் வழங்கி உத்தரவிட்டு, விசாரணையை பிப்ரவரி 13 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!