திமுக முன்னாள் எம்.பி. மஸ்தான் கொலை வழக்கில் அவரது தம்பியின் ஜாமீன் மனு தள்ளுபடி

திமுக முன்னாள் எம்.பி. மஸ்தான் கொலை வழக்கில் அவரது தம்பியின் ஜாமீன் மனு தள்ளுபடி
X

சென்னை உயர் நீதிமன்றம். (கோப்பு படம்).

திமுக முன்னாள் எம்.பி. மஸ்தான் கொலை வழக்கில் அவரது தம்பியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணைய துணைத் தலைவராக இருந்த திமுகவைச் சேர்ந்த முன்னாள் எம்.பி. டாக்டர் மஸ்தான் கடந்த டிசம்பர் மாதம் 22 ஆம் தேதி சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழன்தார். அவரது இறப்பில் மர்மம் இருப்பதாக மஸ்தானின் மகன் ஹரிஸ் நவாஸ் கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதைத்தொடர்ந்து போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.

போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில் மஸ்தானிடம் கார் ஓட்டுநராக வேலைபார்த்து வந்த அவரது நெருங்கிய உறவினரான இம்ரான்பாஷா என்பவர் மீது சந்தேகமடைந்தனர். காரில் சென்று கொண்டிருந்தபோது திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு மஸ்தானுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதாகவும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்றபோதுதான் உயிரிழந்ததாகவும் விசாரணையில் இம்ரான் பாஷா தெரிவித்து இருந்தார்.


தொடர்ந்து, சந்தேகத்தின் அடிப்படையில் கார் ஓட்டுநர் இம்ரான் பாஷா உள்ளிட்ட 5 பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்களை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்திய போது அவர்களிடம் செல்போன் உரையாடல் குறித்து விசாரிக்கப்பட்டது. அப்போது, டாக்டர் மஸ்தான் கொலையில் அவரது தம்பி கவுஸ் ஆதம்பாஷாவுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து அவரது தம்பியான கவுஸ் ஆதம்பாஷாவை போலீஸார் கைது செய்தனர். விசாரணையில், பூர்வீக சொத்து தகராறு, பணப்பிரச்சினையே மஸ்தான் கொலைக்கு முக்கிய காரணம் என்றும் 5 லட்சம் ரூபாய் கடனை திரும்ப கேட்டதால் நண்பர்கள் உதவியுடன் மஸ்தானை கொன்றதாக காவல்துறையிடம் தம்பி வாக்குமூலம் அளித்து இருந்தார்.

இந்த கொலை வழக்கில் கைதான இம்ரான் பாஷாவுடன் மஸ்தானின் தம்பி கவுஸ் ஆதம்பாஷா செல்போனில் அதிக நேரம் பேசியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கவுஸ் அதம் பாஷா ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதி தமிழ்செல்வி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, கொலையான டாக்டர் மஸ்தானின் மகன் ஹரிஸ் நவாஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மனுராஜ், டாக்டர் மஸ்தான் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டு உள்ளதாக தடய அறிவியல் துறை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. குடும்ப பிரச்னைக்காக அவரை கொலை செய்துள்ளனர். எனவே ஜாமீன் வழங்கக் கூடாது என்று வாதிட்டார்.

காவல்துறை தரப்பில் அரசு வழக்கறிஞர் வினோத் ஆஜராகி, டாக்டர் மஸ்தான் மரணம் தொடர்பாக தடய அறிவியல் ஆய்வு அறிக்கையை தாக்கல் செய்தார். மேலும் விசாரணை ஆரம்ப கட்ட இருப்பதால் ஜாமீன் வழங்கக் கூடாது என்று அவரும் எதிர்ப்பு தெரிவித்து வாதிட்டார். இதையடுத்து, கவுஸ் அதம் பாஷாவின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி தமிழ்ச்செல்வி உத்தரவிட்டார்.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!