கோயில் திருவிழாக்களில் ஒலிப்பெருக்கிகள் பயன்படுத்துவதை தவிர்க்க உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

கோயில் திருவிழாக்களில் ஒலிப்பெருக்கிகள் பயன்படுத்துவதை தவிர்க்க உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்
X

சென்னை உயர் நீதிமன்றம். (கோப்பு படம்).

தமிழகத்தில் பொதுத் தேர்வு நேரத்தில் கோயில் திருவிழாக்களில் ஒலிப்பெருக்கிகள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.

சேலம் மாவட்டம், கொண்டாலம்பட்டி கிராமத்தில் உள்ள சர்வசித்தி விநாயகர், மாரியம்மன், காளியம்மன், முனியப்பன் உள்ளிட்ட கோயில்களில் தேர்வு நேரத்தில் பங்குனி திருவிழா நடத்த தடை விதிக்கவும், தேர்வுகள் முடியும் வரை திருவிழாக்களை தள்ளிவைக்க உத்தரவிடக் கோரியும் அதே கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்து இருந்தார்.

இந்த மனு, பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் கொண்ட அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், கோயில் திருவிழாக்களின் போது ஒலிப்பெருக்கிகள் பயன்படுத்தப்படுவதால், தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளதால் திருவிழாக்களை தள்ளிவைக்க உத்தரவிட வேண்டும் என வாதிடப்பட்டது.

தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், தேர்வு நேரங்களில் ஒலிப்பெருக்கிகள் பயன்படுத்தக் கூடாது என்பன உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதித்து கடந்த 2019 ஆம் ஆண்டே அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார். விழாக்குழு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 2019 ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அந்த உத்தரவை கண்டிப்புடன் பின்பற்றுவதாக தெரிவித்தார்.

அதை ஏற்றுக் கொண்டு மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள், பங்குனி திருவிழாவை பங்குனி மாதத்தில் தான் நடத்த முடியும் எனவும், பெற்றோர் தங்கள் குழந்தைகள் படிக்க சுமூகமான சூழலை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர். மேலும், தேர்வு நேரங்களில் திருவிழாக்களில் ஒலிப்பெருக்கிகளை பயன்படுத்துவத தவிர்க்க வேண்டும் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!