இடஒதுக்கீடு கொள்கை துஷ்பிரயோகம்.. உயர் நீதிமன்ற நீதிபதிகள் கண்டனம்...

இடஒதுக்கீடு கொள்கை துஷ்பிரயோகம்.. உயர் நீதிமன்ற நீதிபதிகள் கண்டனம்...
X

சென்னை உயர் நீதிமன்றம். (கோப்பு படம்).

அரசு வேலைக்காக போலி சாதிச் சான்று அளித்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்து உள்ளது.

கோவை மாவட்டம், அவிநாசியைச் சேர்ந்த பாலசுந்தரம் என்பவர், பழங்குடியினத்தைச் சேர்ந்தவர் என சாதிச் சான்று அளித்து 1982 ஆம் ஆண்டு கோவை வன மரபியல் நிறுவனத்தில் கலாசியாக பணிக்கு சேர்ந்தார். 1999 ஆம் ஆண்டு இளநிலை எழுத்தராக பதவி உயர்வு வழங்கப்பட்ட நிலையில், அவரது சாதிச்சான்று மாநில அளவிலான ஆய்வுக்குழுவின் ஆய்வுக்கு அனுப்பப்பட்டது.

அவரது சகோதரரும், சகோதரியும் வேறு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என கண்டறிந்த மாநில அளவிலான குழு, அவரது பழங்குடியினர் சாதிச் சான்றிதழை கடந்த 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ரத்து செய்தது. இதன் காரணமாக கடந்த 2020 ஆம் ஆண்டு ஓய்வுபெற்ற அவரது ஓய்வு கால பலன்களும் நிறுத்தப்பட்டன.

இதையெடுத்து, 40 ஆண்டுகளுக்கு முன் வழங்கப்பட்ட தனது சாதிச் சான்றை தற்போது ஆய்வு செய்து ரத்து செய்ய சட்டப்பூர்வமானதல்ல எனக் கூறி பாலசுந்தரம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் வேலுமணி மற்றும் ஹேமலதா அமர்வு, பன்முக தன்மை கொண்ட இந்தியாவில் இடஒதுக்கீட்டு கொள்கை பெருமைக்குரிய ஒன்று எனவும், அரசு வேலைக்காக இட ஒதுக்கீட்டு கொள்கையை துஷ்பிரயோகம் செய்தவர்கள் தண்டிக்கப்படாமல் விடக்கூடாது எனக் கூறி, பாலசுந்தரத்தின் சாதிச் சான்று ரத்து செய்த உத்தரவை உறுதி செய்து, அவர் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

போலி சாதிச் சான்றிதழை கண்டறிய தாமதம் ஏற்பட்டதை காரணம் காட்டி, இடஒதுக்கீடு கொள்கையை துஷ்பிரயோகம் செய்ததை நியாயப்படுத்த முடியாது என்றும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கருத்து தெரிவித்து உள்ளனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!