ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை நிறுத்தக் கோரிய வழக்கு தள்ளுபடி

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை நிறுத்தக் கோரிய வழக்கு தள்ளுபடி
X

சென்னை உயர் நீதிமன்றம். (கோப்பு படம்).

ஈரோடு கிழக்குத் தொகுதி தேர்தலை நிறுத்தக் கோரி சுயேட்சை வேட்பாளர் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 27 ஆம் தேதி நடைபெறுகிறது. தேர்தல் பிரசாரம் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா மற்றும் பரிசுப் பொருட்கள் விநியோகம் அதிகளவு செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுதொடர்பாக, அதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சியினர் தொடர்ந்து பல்வேறு புகார்களை தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையே, தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவது தொடர்பாக தேர்தல் ஆணையம் மற்றும் காவல்துறையிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என சுயேட்சை வேட்பாளர் கண்ணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடந்து இருந்தார்.

இதேபோல பிரசாரத்தின்போது தங்கள் கட்சியினரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், பிரசாரத்துக்கு பாதுகாப்பு வழங்கக் கோரியும் நாம் தமிழர் கட்சியின் சட்டத்துறை செயலாளர் சேவியர் பெலிக்ஸ் வழக்கு தொடர்ந்து இருந்தார்.

மேலும், தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் மதுபானம் விநியோகம் செய்வதற்காக ஆளும்கட்சியினர் சட்டவிரோதமாக அமைத்துள்ள கொட்டகைகளை அகற்றக் கோரி மற்றொரு சுயேட்சை வேட்பாளர் ரவி என்பவரும் வழக்கு தொடர்ந்து இருந்தார்.

இந்த வழக்குகள் பொறுப்புத் தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்திய தேர்தல் ஆணையம் தரப்பில் நிரஞ்சன் ராஜகோபாலன் ஆஜராகி, பண பணப்பட்டுவாடாவை தடுக்க கண்காணிப்பு குழுக்களும், பறக்கும்படைகளும் அமைக்கப்பட்டு உள்ளதாகவும், ஏற்கெனவே உயர் நீதிமன்றம் தேர்தலை நியாயமாக நடத்துவது குறித்த உத்தரவு முறையாக அமல்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். மேலும் இந்த புகார்கள் தொடர்பாக விசாரித்து, முகாந்திரம் இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் 163 கொட்டகைகள் கண்டறியப்பட்டதாகவும், அதில் 107 கொட்டகைகளுக்கு அனுமதி பெறப்பட்டு உள்ளதாகவும், 42 கொட்டகைகளை சம்பந்தப்பட்ட கட்சியினரே அகற்றி விட்டதாகவும், மீதமுள்ளவற்றிற்கு சீல் வைக்கப்பட்டு உள்ளதாகவும் நிரஞ்சன் ராஜகோபாலன் தெரிவித்தார்.

நாம் தமிழர் கட்சி தொடர்ந்த வழக்கில், தமிழக காவல்துறை தரப்பில் அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி, நாம் தமிழர் கட்சியினர் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி பெற்றுவிட்டு வழித்தடத்தை மீறி பேரணி சென்றதாகவும், பிளாஸ்டிக் பைப்புகளில் இரும்பு பைப்புகள் பொருத்தி வன்முறையில் ஈடுபட்டதாகவும் தெரிவித்தார். இதுதொடர்பாக இரு தரப்பினர் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், பணப்பட்டுவாடா புகாரை பொறுத்தவரை, எந்த தேதியில், யார் பணம் கொடுத்தார்கள், பெற்றார்கள் என்பது தொடர்பான விவரங்கள் இல்லை என்றும், தேர்தல் நடைமுறைகள் தொடங்கிவிட்டால் அவற்றில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் கூறி, தேர்தலை நிறுத்தக் கோரி கண்ணன் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

நாம் தமிழர் கட்சி மற்றும் ரவி தொடர்ந்த வழக்குகளில், அதிமுக தொடர்ந்த வழக்கில் ஏற்கெனவே விரிவான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், மனுதாரர்களின் புகார்களை பரிசீலித்து முடிவு எடுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டு வழக்குகளை முடித்து வைத்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!