சேவை வரியை எதிர்த்து இசையமைப்பாளர் ரஹ்மான் தாக்கல் செய்த வழக்கு தள்ளுபடி
சென்னை உயர் நீதிமன்றம். (கோப்பு படம்).
தமிழில் ரோஜா திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகி ஆஸ்கர் விருதுகளை பெற்று புகழின் உச்சிற்கு சென்றவர் பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான். அவரது படைப்புகளுக்கு, 6 கோடியே 79 லட்ச ரூபாய் சேவை வரி செலுத்த வேண்டும் என, சரக்கு மற்றும் சேவை வரி எனப்படும் ஜி.எஸ்.டி., ஆணையர் கடந்த 2019 ஆம் ஆண்டு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி கடந்த 2020 ஆண்டு இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இசை படைப்புகளின் காப்புரிமை, பட தயாரிப்பாளர்களுக்கு நிரந்தரமாக வழங்கிய பின், அதன் உரிமையாளர்கள் அவர்கள் தான் என்றும், தன்னிடம் வரி வசூலிப்பது சட்டவிரோதம் எனவும் மனுவில் ஏ.ஆர். ரஹ்மான் தெரிவித்து இருந்தார். மேலும், தன் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாகவும் கூறியிருந்தார்.
இந்த வழக்கில் ஜி.எஸ்.டி. ஆணையர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், வரி ஏய்ப்பு செய்ததாக கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையிலேயே ஏ.ஆர். ரகுமானுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டதாகவும், அவரது புகழை களங்கப்படுத்தும் நோக்கம் ஏதும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
ஜி.எஸ்.டி. துறையிலேயே மேல்முறையீடு செய்து தீர்வை பெறாமல் தொடரப்பட்ட இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும், ஜிஎஸ்டி ஆணையர் தரப்பில் கூறப்பட்டிருந்தது. இதேபோல, ஒரு கோடியே 84 லட்சம் ரூபாய் சேவை வரி செலுத்த கூறி ஜி.எஸ்.டி ஆணையர் அனுப்பிய நோட்டீசை எதிர்த்து இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமாரும் மனுத்தாக்கல் செய்து இருந்தார்.
இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மனு விசாரணைக்கு உகந்ததல்ல எனக் கூறி, தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், ஜி.எஸ்.டி. ஆணையரின் உத்தரவை எதிர்த்து ஜி.எஸ்.டி. மேல் முறையீட்டு அதிகாரியிடம் நான்கு வாரங்களில் மேல் முறையீடு செய்யலாம் எனவும் நீதிபதி அனிதா சுமந்த் உத்தரவிட்டார்.
ஜி.எஸ்.டி. வரி விதிப்பது தொடர்பாக விளக்கம் கேட்டு அனுப்பிய நோட்டீசை எதிர்த்து இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி அனிதா சுமந்த், ஜி.எஸ்.டி இணை ஆணையர் அனுப்பிய நோட்டீசுக்கு சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் நான்கு வாரங்களில் பதில் அளிக்கும்படி ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு உத்தரவிட்டார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu