முரசொலி அறக்கட்டளை தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்.
முரசொலி அலுவலகம் உள்ள நிலம் பஞ்சமி நிலம் என்று தேசிய எஸ்.சி., எஸ்.டி., ஆணையத்தில் பா.ஜ.க., நிர்வாகி சீனிவாசன் புகார் கொடுத்தார். இந்த புகாரின் அடிப்படையில் எஸ்.சி., எஸ்.டி., ஆணையம் அனுப்பிய சம்மனை எதிர்த்து முரசொலி அறக்கட்டளை தரப்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் விசாரித்தார். பின்னர், இன்று வழங்கிய இந்த வழக்கின் தீர்ப்பில் கூறியிருப்பதாவதுல் மனுதாரர் நிலம் குறித்து வந்த புகாரின் அடிப்படையில், ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதன் பின்னர், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, ஆணையத்தின் நோட்டீசுக்கும், அதை தொடர்ந்து விசாரணை நடத்துவதற்கும் தடை விதிக்கும் விதமாக எந்த ஒரு முகாந்திரமும் இல்லை. விசாரணைக்கு தடை விதிக்க எந்த காரணத்தையும் மனுதாரர் கூறவில்லை.
தற்போது, இந்த விவகாரம் ஆரம்பக்கட்ட நிலையில் தான் உள்ளது. தேசிய எஸ்.சி., எஸ்.டி., ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளதில் எந்த விதிமீறலும் இல்லை. தேசிய ஆணையத்தின் முன்பு மனுதாரர் தன் தரப்பு நியாயங்களை எடுத்துரைக்க எந்த தடையும் இல்லை.
பஞ்சமி நிலம் என்பது எஸ்.சி., பிரிவினருக்கு சொந்தமானது. அந்த நிலத்தை வேறு பிரிவினர் அபகரித்துக் கொண்டாலோ, அல்லது அந்த நிலத்தை பயன்படுத்த எஸ்.சி. பிரிவினருக்கு தடை ஏற்பட்டாலோ, அது குறித்து விசாரிக்க தேசிய எஸ்.சி., எஸ்.டி. ஆணையத்துக்கு அதிகாரம் உள்ளது.
தற்போது, முரசொலி அலுவலகம் உள்ள நிலம், பஞ்சமி நிலம் இல்லை என்று அரசு தரப்பில் கூறப்பட்டது. இந்த ரிட் வழக்கில் இது யாருடைய நிலம் என்று முடிவு செய்ய முடியாது.
மேலும், இந்த ஆணையத்தின் துணை தலைவராக இருந்த எல்.முருகன், பா.ஜ.க.வைச் சேர்ந்தவர் என்பதால் உள்நோக்கத்துடன் சம்மன் அனுப்பியதாக குற்றம் சாட்டப்பட்டது. ஆனால், தற்போது எல்.முருகன் அந்த பதவியில் இல்லை. அவர் மத்திய அமைச்சராக உள்ளதால், இந்த புகார் குறித்து ஆணையம் விசாரிப்பதில் எந்த தவறும் இல்லை.
எனவே, பஞ்சமி நிலம் என்று வந்த புகாரின் அடிப்படையில், முரசொலி அறக்கட்டளைக்கு புதிதாக தேசிய ஆணையம் நோட்டீஸ் அனுப்ப வேண்டும்.
பின்னர், அனைத்து தரப்புக்கும் வாய்ப்பு கொடுத்து, யாருடைய செல்வாக்கிற்கும் அடிபணியாமல், சட்டப்படி விசாரணை நடத்த வேண்டும். இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறேன் என்று நீதிபதி கூறி உள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu