மின் கட்டண உயர்விற்கு எதிரான வேலை நிறுத்த போராட்டத்தால் ரூ.9 ஆயிரம் கோடி இழப்பு
தமிழகத்தில் இன்று மின் கட்டண உயர்விற்கு எதிரான வேலை நிறுத்த போராட்டத்தால் ரூ.9 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
HIGHLIGHTS

வேலை நிறுத்த போராட்டம் காரணமாக திருப்பூரில் டெய்லரிங் யூனிட் தொழிலாளர்கள் இல்லாமல் வெறிச்சோடி உள்ள காட்சி.
தமிழகத்தில் குறிப்பாக கோவை, ஈரோடு, திருப்பூர், நாமக்கல், சேலம், கரூர் உள்ளிட்ட கொங்கு மண்டலத்தில் ஏராளமான சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த தொழில் நிறுவனங்களுக்கு பீக் ஹவர் மின் கட்டணம் என தமிழக அரசால் கூடுதல் மின் கட்டணம் விதிக்கப்பட்டது. இதனால் இந்த நிறுவனங்களை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது.
எனவே தமிழ்நாட்டில் பீக் ஹவர் மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும், மின்சார நிலைக் கட்டணத்தை திரும்ப பெற வேண்டும், சோலார் பேனல் அமைக்க துணை கட்டணம் வசூலிப்பதை நிறுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 5 கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் தொழிற் சாலைகளில் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்றது. இதனால் ரூ. 9 ஆயிரம் கோடி உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் பீக் ஹவர் மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும், மின்சார நிலைக் கட்டணத்தை திரும்ப பெற வேண்டும், சோலார் பேனல் அமைக்க துணை கட்டணம் வசூலிப்பதை நிறுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பு சார்பாக ஏற்கனவே கடந்த 7ஆம் தேதி காரணம்பேட்டை பகுதியில் உண்ணாவிரத போராட்டமும், தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்க்கக் கூடிய வகையில் கடிதம் மற்றும் இமெயில் அனுப்பும் போராட்டங்கள் நடத்தப்பட்டன. இந்நிலையில் கோரிக்கைகள் ஏற்கப்படாத நிலையில்தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பு சார்பாக செப்டம்பர் 25ம் தேதி வேலை நிறுத்த போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருந்தனர். அதேபோல கோவையில் உள்ள தொழில் கூட்டமைப்பான தமிழ்நாடு தொழில் தொழில் அமைப்பினரும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்பதாக அறிவித்தனர்.
தமிழக மின்வாரியம் சார்பாக உயர்த்தப்பட்டுள்ள 430 சதவீத நிலைக் கட்டணத்தை திரும்பப் பெற வேண்டும் எனவும், பரபரப்பு நேர கட்டணம், சோலார் மேற்கூரை நெட்வொர்க் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் , மல்டி இயர் டாரிப் கட்டணத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் மற்றும் இரண்டு ஆண்டுகளுக்கு மின் கட்டணத்தை உயர்த்துவதை தவிர்க்க வேண்டும் என்று உற்பத்தி நிறுத்த போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இதுகுறித்து தொழில் துறையினர் கூறுகையில், பொருளாதாரம் மந்த நிலை, மூலப் பொருட்களின் விலை உயர்வு, திறன்மிகு பணியாளர்களின் பற்றாக்குறை போன்ற பல இன்னல்களை தொழில்துறை சந்தித்து வருவதாகவும், கடந்த வருடம் அதிகப்படியாக உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தால் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் கடும் பாதிப்பை சந்தித்து இருப்பதாகவும் தெரிவித்தார். இதுகுறித்து பலமுறை அரசிடம் முறையிட்டும் எந்த ஒரு தீர்வும் கிடைக்கவில்லை எனவும், ஆண்டுதோறும் உயர்த்தப்படும் மின் கட்டணம் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்களை நிரந்தரமாக முடக்கிவிடும் அபாயம் உள்ளதாகவும் தெரிவித்தார். மின் கட்டண உயர்வால் பல்வேறு தொழில்கள் பாதிப்படைந்து வருவதாகவும் தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம் நடத்த உள்ளதாகவும் தெரிவித்தனர்.
இதன்படி தமிழ்நாடு முழுவதும் இன்று சுமார் 350 அமைப்புகளை சேர்ந்தவர்கள் ஒருநாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்திலும் பல்வேறு தொழில் அமைப்புகளை சேர்ந்தவர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றுள்ளனர்.
மின் நிலை கட்டண உயர்வு ரத்து உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறும் போராட்டத்திற்கு திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனங்கள் நெட்டிங் எம்ராய்டரி பிரிண்டிங், சாய ஆலைகள் என 19 சங்கங்கள் ஆதரவு தெரிவித்தன. அதன்படி, இன்று கதவடைக்கும் போராட்டம் நடைபெறுகிறது. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு, குறு நிறுவனங்கள் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் 3 லட்சம் தொழிலாளர்களுக்கு இன்று வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது. இன்று ஒரு நாளில் திருப்பூரில் மட்டும் 500 கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கும் என தெரிவித்துள்ளனர்.
திருப்பூரை பொறுத்தவரை மூலப் பொருட்கள் விலையேற்றம் காரணமாக தொழில் நலிவடைந்து வந்த நிலையில் மின்வாரியத்தின் நிலை கட்டணம் மற்றும் பரபரப்பு நேர கட்டணம் காரணமாக தொழிலை நடத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு இருப்பதாகவும் , தமிழக முதல்வர் இதனை கவனத்தில் கொள்ளவில்லை என்றால் திருப்பூரில் தொழில்துறை மிகவும் நலிவடையும் எனவும் தெரிவித்தனர். இது குறித்து தமிழக அரசின் கவனத்துக்கு கொண்டு சென்ற நிலையிலும் தங்கள் கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை எனில் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தப்படும் எனவும் தெரிவித்தனர்.
ஈரோடு மாவட்டத்தில் சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் அதாவது ஆயில் மில், தேங்காய் நார் தொழிற்சாலை, ஜவுளி உற்பத்தி நிறுவனங்கள், காங்கிரீட் கற்கள் உற்பத்தி நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் இன்று உற்பத்தி நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. இதன் காரணமாக சுமார் ரூ.500 கோடி அளவிலான உற்பத்தி மற்றும் வர்த்தகம் பாதிக்கப்படும் என அமைப்பின் நிர்வாகிகள் கூறினர்.
போராட்டத்திற்கு தேனி மாவட்ட உணவுப்பொருட்கள் உற்பத்தியாளர்கள் சங்கம், வைகை பருப்பு வியாபாரிகள் சங்கம், மாவட்ட வியாபாரிகள் சங்கம், அரிசி ஆலை உற்பத்தியாளர்கள் சங்கம், எண்ணெய் ஆலை அதிபர்கள் சங்கம், சிட்கோ தொழில் நிறுவனங்கள் சங்கங்கள் ஆதரவு அளித்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
இதே போல் தமிழகம் முழுவதும் உள்ள தொழிற்சாலைகள் இன்று வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக தமிழ்நாடு முழுவதும் 9 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு உற்பத்தி இழப்பும், 2500 கோடி ரூபாய் அளவிற்கு அரசிற்கு வருவாய் இழப்பும் ஏற்பட்டுள்ளது என தொழில் துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த போராட்டத்தில் 8 இலட்சம் தொழிற்கூடங்கள் பங்கேற்றதாகவும், 90 இலட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்து இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.