ரயில் ஓட்டுநர்கள் ஸ்மார்ட் வாட்ச் அணிய தடை: தெற்கு ரயில்வே

ரயில் ஓட்டுநர்கள் ஸ்மார்ட் வாட்ச் அணிய தடை: தெற்கு ரயில்வே
X
பணியின் போது ரயில் ஓட்டுநர்கள் ஸ்மார்ட் வாட்ச் அணிய தடை விதித்து தெற்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2ம் தேதி இரவு 7 மணியளவில் மேற்கு வங்கத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டம் பஹாநகர் பஜார் ரயில் நிலையம் அருகே சென்றுகொண்டிருந்தபோது, மாற்று தண்டவாளத்தில் ஏற்கனவே நிறுத்தப்பட்டிருந்த சரக்கு ரயில் மீது அதிவேகமாக மோதி விபத்துக்குள்ளானது.

மோதிய வேகத்தில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலின் பெட்டிகள் தடம்புரண்டு அருகில் இருந்த தண்டவாளத்தில் விழுந்துள்ளது. அப்போது அந்த தண்டவாளத்தில் வந்த பெங்களூரு-ஹவுரா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் தடம்புரண்டு கிடந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகள் மின்னல் வேகத்தில் மோதியது.

அடுத்தடுத்து 3 ரயில்கள் மோதிய இந்த பயங்கர விபத்தில், 280க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 1,175 பேர் காயமடைந்துள்ளனர். இதனை தொடர்ந்து நாடு முழுவதும் ரயில் விபத்துக்களை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந் நிலையில், மதுரை கோட்டத்தில் பணியின்போது ரயில் என்ஜின் ஓட்டுநர்கள் 'ஸ்மார்ட் வாட்ச்' அணிய தடை விதித்து தெற்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளது. 'ஸ்மார்ட் வாட்ச்' அணிந்து பணியாற்றுகிறபோது கவனக்குறைவு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

மேலும் ரெயில் வேகமாக செல்லும்போது கவன சிதறல் ஏற்பட்டால் விபரீதமாகிவிடும். அதனால் இந்த உத்தரவை அதிகாரிகள் பிறப்பித்துள்ளனர். இந்த உத்தரவு சென்னை கோட்டத்திலும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இனி அடுத்தடுத்து நடைமுறைப்படுத்தப்படும்.

Tags

Next Story
ai in future agriculture