உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாத ஒன்பது மாவட்டங்களில் செப்டம்பர் 15க்குள் தேர்தல்

தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாமல் உள்ள ஒன்பது மாவட்டங்களுக்கும் வரும் செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிவுகளை அறிவிக்க வேண்டும் என தமிழ்நாடு தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது
தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது தொடர்பாக சங்கர் என்பவர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் ஊரக உள்ளாட்சி பகுதிகளில் இட ஒதுக்கீடு மற்றும் 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தொகுதி மறுவரையறை மேற்கொண்ட பிறகு தேர்தலை நடத்த வேண்டும் என கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட ஒன்பது மாவட்டங்களுக்கு அடுத்த மூன்று மாதத்தில் தொகுதி மறு வரையறை செய்தபிறகு தான் தேர்தலை நடத்த வேண்டும் என உத்தரவு பிறப்பித்திருந்தது.
கடந்த ஆண்டு டிசம்பர் 11ம் தேதிக்குள் தொகுதி மறுவரையரை பணிகளை நிறைவு செய்து அது தொடர்பான விவரங்களை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்த போதும் கொரோனா பரவல் உள்ளிட்ட காரணங்களை காட்டி ஆறு மாத காலம் அவகாசம் கோரியது. தமிழ்நாடு தேர்தல் ஆணையம் அதனை ஏற்று அவகாசமும் வழங்கியது.
இதற்கிடையில், இந்த வழக்கு இன்று மீண்டும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஹேமந்த் குப்தா, அனிருத்தா போஷ் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது தொடர்பாக ஏற்கனவே போதுமான கால அவகாசம் மாநில தேர்தல் ஆணையத்திற்கு வழங்கி விட்டோம். எனவே தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் உள்ள 9 மாவட்டங்களுக்கான தொகுதி மறு வரை பணிகளை முழுமையாக நிறைவு செய்து தேர்தல் தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டு வாக்குப்பதிவை நடத்தி தேர்தல் முடிவுகளை வரும் செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என மாநில தலைமை தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
தமிழகத்தில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, நெல்லை, தென்காசி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், திருப்பூர் ஆகிய 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu