ஹைய்யா... மறுபடியும் வந்தாச்சு அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி...!
மழலையர் வகுப்புகள் எனப்படும் எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகள், கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் தொடங்கப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகளில் நடப்பு கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கை நிறுத்தப்பட்டது. மேலும் எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகளை வரும் கல்வியாண்டு முதல் மூடுவதாக தமிழக பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது. இதற்கு அரசியல் கட்சிகள், கல்வியாளர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் மீண்டும் மழலையர் வகுப்புகள் எந்த நிதிச்சுமை இருந்தாலும் தொடங்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதியளித்துள்ளார்.
மயிலாடுதுறையில், அறிவகம் குழந்தைகள் நல காப்பகத்தில், பிறவியிலேயே இரண்டு கைகளும் இல்லாத மாணவி லட்சுமி தங்கி படித்து வருகிறார். மயிலாடுதுறை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் உதவியுடன் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதி, 277 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றார். இதையடுத்து மாணவி லட்சுமிக்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ், இளைஞர் நலத் துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் நேரில் சந்தித்து பாராட்டினர்.
இதைத்தொடர்ந்து, அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களிடம் கூறுகையில், மாணவி லட்சுமியின் உயர்கல்விக்கு, மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுத்து அனைத்து உதவிகளும் வழங்கப்படும். தமிழகத்தில், அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி., வகுப்புகள் எந்த நிதிச்சுமை இருந்தாலும் தொடர்ந்து நடத்தப்படும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார். அதற்காக சிறப்பு ஆசிரியர்களை தேர்வு செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதைத்தொடர்ந்து, தமிழகத்தில் அரசு பள்ளிகளில் விரைவில் எல்.கே.ஜி., யு.கே.ஜி வகுப்புகள் தொடங்கப்படும் என குறிப்பிட்டார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu