ஆன்லைன் மூலம் மருந்து விற்பனையை தடை செய்ய கோரி மத்திய அரசுக்கு கடிதம்

ஆன்லைன் மூலம் மருந்து விற்பனையை தடை செய்ய கோரி மத்திய அரசுக்கு கடிதம்
X
ஆன்லைன் மூலம் மருந்துகள் விற்பனையை தடை செய்ய கோரி மத்திய சுகாதாரத்துறை அமைச்சருக்கு அகில இந்திய மருந்து வணிகர் சங்கம் கடிதம் அனுப்பியுள்ளது

வலி நிவாரணி மாத்திரைகளை இளைஞர்கள் ஆன்லைன் மூலம் வாங்கி போதைக்கு பயன்படுத்துவதால், ஆன்லைன் விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது

இது குறித்து தமிழ்நாடு மருந்து வணிகர் சங்கத்தின் பொருளாளர் கூறியதாவது: வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தலையிட்டு போதை பொருள் பழக்கத்திலிருந்து இளைஞர்களை மீட்பதற்காக தமிழக முதல்வர் நேரடியாக மிகப்பெரிய முன்னெடுப்பை எடுத்துள்ளார். இன்றைய இளைஞர்கள் வலி நிவாரணி மாத்திரைகளை ஆன்லைன் மூலம் வாங்கி போதைக்கு பயன்படுத்துகின்றனர். ஆன்லைன் மூலமாக மருந்துகள் விற்க கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவு பிறப்பித்துள்ளது. அதே நேரத்தில் தமிழக அரசின் கடும் நடவடிக்கையால் இங்கு நிலைமை சீராக உள்ளது.

ஆனால் வடமாநிலங்களில் உள்ள ஆன்லைன் மருந்து நிறுவனங்களிடம் இருந்து தமிழக இளைஞர்கள் மருந்துகளை பெறுகின்றனர். இதை தடுப்பது என்பது காவல்துறைக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது. ஆன்லைன் மருந்துகள் விற்பனையை தடை செய்யும் பொறுப்பு மத்திய அரசிடம் தான் உள்ளது. ஆனால் மத்திய அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

சமீபத்தில் பஞ்சாபில் ஏராளமான இளைஞர்கள் வலி நிவாரண மாத்திரைகளை வாங்கி போதைக்கு பயன்படுத்தி பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டது. இது அந்த மாநில அரசுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக இந்தியாவின் மிகப்பெரிய ஆன்லைன் வர்த்தக நிறுவனமான ரிலையன்ஸ் நெட் மெட்ஸ் நிறுவனம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, அந்த நிறுவனத்திடம் இருந்து 8000க்கு மேற்பட்ட தூக்க மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ஆன்லைன் மூலம் எந்தவித மருத்துவரின் பரிந்துரை சீட்டும் இல்லாமல் இளைஞர்களுக்கு மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளது . இதேபோல் உத்தரகாண்ட், ஒடிசா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களிலும் இந்த பிரச்னை பூதாகரமாக வெடித்துள்ளது. மத்திய அரசு ஏன் ஆன்லைன் மருந்து வணிகத்தை தடை செய்யாமல் இருக்கிறது? என்று தெரியவில்லை என்றார்.

மேலும் அவர் கூறுகையில், போலியான மருத்துவ பரிந்துரைகளை அனுப்பினால் கூட பார்சல் மூலம் வலி நிவாரணி மருந்துகளை ஆன்லைன் நிறுவனங்கள் வழங்குகின்றன. எனவே ஆன்லைன் மருந்து வணிகத்தை உடனடியாக தடை செய்ய கோரி மத்திய சுகாதாரத்துறை அமைச்சருக்கு அகில இந்திய மருந்து வணிகர் சங்கம் சார்பாக கடிதம் எழுதப்பட்டுள்ளது என்றார்.

இளைஞர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு மத்திய அரசு ஆன்லைன் மூலமாக மருந்து வணிகத்தை தடை செய்ய வேண்டும் எனவும் அவர் கோரிக்கை வைத்தார்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!