மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை காணோம் -தமிழக எம்.பி.க்கள் கூறுவது என்ன?
தமிழகத்தில் மத்திய அரசின் சர்வதேச தரத்திலான எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்பட வேண்டும் என்பது நீண்ட கால கோரிக்கை. ஆரம்பத்தில் இந்த மருத்துவமனை திருச்சியில் தான் அமைக்கப்படும் என மத்திய காங்கிரஸ் ஆட்சியில் உறுதி அளிக்கப்பட்டு இருந்தது. ஆனால் இந்த திட்டம் பின்னர் சேலத்திற்கு மாற்றப்பட்டதாக கூறப்பட்டது. சேலத்திலும் இந்த திட்டம் நிறைவேற்றப்படவில்லை. அதன் பின்னர் எய்ம்ஸ் மருத்துவமனையை தமிழகத்தில் எங்கு அமைப்பது என்பதற்காக கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் இடம் தேர்வு தீவிரமாக நடைபெற்று வந்தது. இறுதியாக மதுரை மாவட்டம் தோப்பூரில் அமைப்பது என இறுதி செய்யப்பட்டது.தோப்பூரில் இதற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி விட்டு சென்றார். அதன் பின்னர் பணிகள் எதுவும் நடைபெறவில்லை.
இந்நிலையில் கடந்த சட்டமன்ற பொது தேர்தல் பிரச்சாரத்தின் போது தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மோடி அடிக்கல் நாட்டி விட்டு சென்ற செங்கல்களில் ஒன்றை கையில் எடுத்துக்கொண்டு எய்ம்ஸ் மருத்துவமனை இதுவரை அமைக்கப்படவில்லை. அதற்காக இந்த செங்கல் மட்டும் தான் நட்டு வைக்கப்பட்டிருந்தது .அதையும் எடுத்து வந்து விட்டேன் என நகைச்சுவையாக பிரசாரம் செய்தார் .
இந்நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் அகில இந்திய தலைவர் ஜே.பி. நட்டா தனது மதுரை சுற்றுப்பயணத்தின் போது எய்ம்ஸ் மருத்துவமனை பற்றி சில விளக்கங்களை அளித்திருந்தார். அப்போது அவர் கூறுகையில் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட 1,264 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருப்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதற்கான 95 சதவீத பணிகள் நிறைவடைந்து விட்டன. கூடுதலாக தொற்றுநோய் பிரிவுக்கு 164 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனை 750 படுக்கை வசதிகளுடனும், 250 தீவிர சிகிச்சை பிரிவு படுக்கைகளுடனும் அமையவிருக்கிறது என்றார்.
இந்நிலையில் ஜே.பி.நட்டா கூறியிருப்பது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போன்ற ஒரு தகவலாகவும் மதுரையில் எய்ட்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு எந்த விதமான பணிகளும் நடைபெறவில்லை. இது முழுக்க பொய் என கூறியுள்ளனர் மதுரை எம்.பி. வெங்கடேசன் மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாணிக்கம் தாகூர் எம்.பி.
மேலும் தோப்பூர் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தை நேரில் பார்வையிட்ட அவர்கள் அதன் பின்னர் கூறியிருப்பதாவது:-
மதுரை மாவட்டத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை 95 சதவீத பணிகள்முடிந்து விட்டது என்று ஒரு பொய்யான தகவலை பா.ஜ.க. அகில இந்திய தலைவர் நட்டா கூறியது அதிர்ச்சியாக இருக்கிறது. ஒரே வாரத்தில் எப்படி கட்டி முடித்துள்ளனர் என பார்த்து விடலாம் என்பதற்காக இங்கு நேரடியாக வந்தோம். இந்த இடத்தில் ஒரு போர்டை கூட காணோம். அங்கு ஒரு செங்கல் ஒரே ஒரு கல் இருந்தது. அதுவும் இப்போது இல்லை.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை ரூ.1200 கோடி க்கு அறிவிக்கப்பட்டு கடந்த ஆண்டு இந்த திட்டம் 1900 கோடிக்கு செயல்படுத்த உயர்த்தப்பட்டது. இதற்காக ஜப்பானின் ஜெயிக்கா நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டு உள்ளது. ஆனால் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உயர்த்தப்பட்ட ரூ.700 கோடிக்கு மத்திய அரசு ஒப்புதல் தரவில்லை. எனவே அமைச்சரவையை கூட்டி உயர்த்தப்பட்ட தொகைக்கு ஒப்புதல் வழங்க வேண்டும். தமிழக அரசு போதுமான நிலத்தை ஒப்படைத்து விட்டது. சுமார் ஒன்றரை ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் உயர்த்தப்பட்ட தொகைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்கவில்லை. அதனால் ஒப்பந்த பள்ளி கோரவில்லை. இதுதான் உண்மையான நிலை. இதைப்பற்றி மக்கள் சிந்திக்க கூடாது என்பதற்காக ஒரு முழு பொய்யை நட்டா கூறி உள்ளார்.
முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் நட்டா முழு பூசணிக்காயை சோற்றுக்குள் மறைக்கும் வேலையாக எய்ம்ஸ் மருத்துவமனை 95 சதவீத வேலை முடிந்துள்ளது. பிரதமர் அதனை நாட்டு அர்ப்பணிப்பார் என்று கூறியிருப்பது வடிவேல் சினிமா போல கிணற்றை காணவில்லை என்பது போல் உள்ளது .நாட்டில் உள்ள 23 எய்ம்ஸ் மருத்துவமனைகளில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மட்டுமே ஜப்பான் நாட்டுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து ஜெயிக்கா நிறுவனத்திடம் நிதி பெற்று மருத்துவமனை கட்டப்படுகிறது. மற்ற எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்கு அரசின் பொது நிதியில் இருந்து நிதி ஒதுக்கீடு செய்து கட்டப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வெறும் 200 கோடி ரூபாய் மட்டுமே அரசு செலவு செய்கிறது. 89 சதவீத நிதிஜப்பானின் ஜெயிக்கா நிறுவனம் தான் ஒதுக்கீடு செய்கிறது. அதற்கான ஒப்புதல் வழங்கியும் மத்திய அரசு அமைச்சரவை கூட்டத்தில் அதற்கு ஒப்புதல் பெறவில்லை அதன் பிறகு பணிகள் துவங்குவதற்கான டெண்டர் விடப்பட வேண்டும். இதற்கான பணிகள் இதுவரை மத்திய அரசு செய்யவில்லை. தென் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் ஏமாந்தவர்கள் அல்ல. மதுரை எய்ம்ஸ் கட்டடத்தை யாரோ திருடி சென்று விட்டார்களா என தெரியவில்லை என்று கூறியுள்ளனர்.
எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பாக பா.ஜ.க. அகில இந்திய தலைவர் நட்டா கூற்றுக்கு 2 நாளில் பதில் அளித்து இருக்கிறார்கள் தமிழக எம்.பி.க்கள் இருவர். அதற்கு ஆதாரமாக வெறும் மைதானமாக உள்ள இடத்தில் செல்பி எடுத்து அதனையும் பதிவிட்டு இருக்கிறார்கள் இதற்கு மத்திய அரசின் பதில் என்ன என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu